தொண்டமான்; மலையகத் தந்தையின் பேரன்; ஜல்லிக்கட்டு ரசிகன்…

ஆறுமுகன் தொண்டமான்

ஆறுமுகன் தொண்டமான்

மலையகத் தமிழர்கள் என்பவர்கள் யார், எதற்காக இங்கிருந்து இலங்கைக்குப் போனார்கள் என்பது பற்றித் தெரிந்துகொண்டால்தான், மாரடைப்பால் மறைந்த ஆறுமுகம் தொண்டமான் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) நேற்றிரவு காலமானார்.

பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கலாமா… ஈழத் தமிழர் விவகாரம் குறித்து விவாதம் எழும்போதெல்லாம் பெரும்பாலானவர்களால் இப்படியொரு கருத்து முன்வைக்கப்படும். ஆனால், இலங்கையில் தனி நாடு கேட்டு போராடியவர்கள், பிழைக்கப்போனவர்கள் அல்ல. அவர்கள், வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கையின் பூர்வகுடி மக்கள். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கப் போனவர்கள் என யாருமே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறார்கள். அவர்கள்தான் மலையகத் தமிழர்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களான இவர்கள், மலை சார்ந்த இடங்களில் வாழ்ந்துவருவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் யார், எதற்காக இங்கிருந்து இலங்கைக்குப் போனார்கள் என்பது பற்றித் தெரிந்துகொண்டால்தான், மாரடைப்பால் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பற்றி நாம் புரிந்துகொள்ள முடியும்.

தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்

19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம், சாதிக்கொடுமைகள் தாங்காமல் மக்கள் அல்லாடி வந்தனர். மக்களின் இந்த நிலையை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆங்கிலேயர்கள், அவர்களை இலங்கைக்கு அழைத்துச்சென்று, வேலைவாய்ப்புகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். தனுஷ்கோடி வரைக்கும் நடைப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தோணிகள் மூலமாக தலைமன்னாருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கிருந்து மீண்டும் இலங்கையின் மலையகப் பகுதிகளுக்கு நடைப்பயணமாகவே அழைத்துச் செல்ல, போகும் வழியிலேயே பலர் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள், ரப்பர், காப்பி, டீ எஸ்டேட்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். நாளொன்றுக்கு பல மணி நேரத்துக்கும் மேலாக வேலைபார்க்க நிர்பந்திக்கப்பட்டனர். அடி, உதை எனப் பல சித்ரவதைகளுக்கும் ஆளாகினர்.

தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமானை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின்

அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவர்தான் சௌமியமூர்த்தி தொண்டமான். இவர்களின் மூதாதையர், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பதூர் அருகே உள்ள பட்டமங்கலம் புதூர் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். இவரின் அப்பா, இலங்கையில் தேயிலைத் தோட்ட வேலைக்காகச் சென்று, பின்னர் தேயிலைத் தோட்டங்களைச் சொந்தமாக வாங்கி தொழில்செய்துவந்தார். தன் 14-வது வயதுவரை தமிழகத்தில் வசித்துவந்த சௌமியமூர்த்தி தொண்டமான், பின்னர் இலங்கைக்குச் சென்று தன் கல்லூரிப் படிப்பை இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் முடித்தார்.

சௌமியமூர்த்தி தொண்டமான்

காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை இந்திய காங்கிரஸின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13, 1939-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தோட்டத் தொழிலாளர்களின் ஒரே நம்பிக்கையாக இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. அவர்களின் உரிமைகளுக்காக, 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரஸின் தொழிற்சங்கக் கிளை ஆம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக சௌமியமூர்த்தியே தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கள மக்களை குடியமர்த்துவதற்காக, தோட்டங்களில் இருந்து வெளியேற்ற இருந்த 360 தமிழ்க் குடும்பங்களைத் தன் போராட்டத்தின் வாயிலாக தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் தொண்டமான்.

இலங்கையில் மலையகத் தமிழர்களின் முகமாகத் திகழ்ந்தவர். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், மலையகத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படுபவருமான சௌமிமய மூர்த்தியின் பெயரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். தமிழர்களின் கலை & கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்; குரல்கொடுத்தவர்.

அன்புமணி ராமதாஸ், எம்.பி

இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, மலையகத் தமிழர்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறிக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. அதனை எதிர்த்து பேரணி, சத்தியாகிரகம் போன்ற பல போராட்டங்களை நடத்தினார் சௌமியமூர்த்தி தொண்டமான். அதனைத் தொடர்ந்து, மலையகத் தமிழர்களை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கக் கோரியது இலங்கை அரசு. அந்நேரம், கட்சியின் பெயரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து, 1964 ல் சிரிமா – சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 ல் இந்திரா காந்தி – பண்டாரநாயகா ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்ட பின்னர், அவற்றின் அடிப்படையில் 5 லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். மீதமிருந்த 3 லட்சம் மலையகத் தமிழர்களைக் காக்க சௌமியமூர்த்தி தொண்டமான் கடும் போராட்டங்களை முன்னெடுத்து, அவர்தம் உரிமைகளை நிலைநாட்டினார். தொடர்ந்து, மலையக மக்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துள்ளார்.

ஆறுமுகன் தொன்டமான்
ஆறுமுகன் தொன்டமான்

அப்படி மலையக மக்களின் உரிமைக்காகப் போராடியவரும், மலையகத் தந்தை என போற்றப்படுபவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன்தான், தற்போது மறைந்துள்ள ஆறுமுகம் தொண்டமான். 1964-ம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், தமிழகத்தின் ஏற்காடு மான்ட்ஃபோன்டில் பள்ளிப் படிப்பையும் கொழும்பு ரோயல் கல்லூரியில், கல்லூரிப் படிப்பையும் பயின்றுள்ளார். தாத்தாவின் வழியில், 1990-ம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து, அரசியலில் காலடி எடுத்துவைத்துள்ளார். 1993-ம் ஆண்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994-ம் ஆண்டு, கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று பிரமாண்ட வெற்றியுடன் நாடாளுமன்றம் சென்றார். சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், 1999-ம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனர், சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் குடும்பவழி வாரிசாக மட்டுமின்றி, அவருக்குப் பின்னர் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்று அரசியல் வாரிசாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். சிங்களத் தலைவர்களோடு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் மலையக மக்களின் நலன்களுக்காக அவர்களுடன் இணக்கமான நட்பைக் கொண்டிருந்தார்.

தொல்.திருமாவளவன் எம்.பி

அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். மலையக மக்களின் நலன்களுக்காகக் கடந்த 30-ஆண்டுகளாகப் பணியாற்றியவர். 25-ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டவர். தமிழக அரசியல்வாதிகள் பலருடன் மிகவும் நெருக்கமான நட்பைப் பேணி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 2010-ம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மலையகத்துக்கும் அழைத்துச்சென்று, தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்தவரும் இவர்தான்.
ஆறுமுகன் தொண்டமான் - மோடி
ஆறுமுகன் தொண்டமான் – மோடி

நேற்று மாலை இந்தியத் தூதரகத்துக்குச் சென்று மரியாதை நிமித்தமாக அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். மாலையில், வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். பின்னர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஒன்பது மணி அளவில் உயிரிழந்துவிட்டார். செய்தி கேள்விப்பட்டவுடன், இலங்கையின் பிரதமர் ராஜபக்ஷே உட்பட, பல அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவிவிட்டார். அவரின் மறைவுக்கு, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், இன்று மாலை பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இன்று (மே 27) முழுவதும் பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை (மே 28) பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அஞ்சலிக்காக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு மல்வத்தை வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் (மே 29), கொத்மலை வேவண்டனிலுள்ள தொண்டமான் பங்களாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வரும் 30-ம் தேதி, கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்துக்குக் கொண்டுசெல்லப்படும். 31-ம் தேதி, இறுதிச் சடங்குகள் நோர்வூட் மைதானத்தில் நடைபெறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக ஆறுமுகம் தொண்டமானின் மைத்துனர் செந்தில் தொண்டமான் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் மலையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறுமுகன் தொண்டமான்
ஆறுமுகன் தொண்டமான்

மறைந்த ஆறுமுகம் தொண்டமான், அடிக்கடி தமிழகம் வந்து சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்துவரும் உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். தமிழக அரசியல்வாதிகளிலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவர், ஆறுமுகம் தொண்டைமான். ஜல்லிக்கட்டுக் காளைகளையும் வளர்த்து வருகிறார். அவரின் மறைவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்