Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஸ்பானிஷ் ஃபுளூ கற்றுத்தந்த பாடங்கள்: கோவிட் 19 எப்படி முடிவுக்கு வரும்?

ஸ்பானிஷ் ஃபுளூ கற்றுத்தந்த பாடங்கள்: கோவிட் 19 எப்படி முடிவுக்கு வரும்?

6 minutes read

spanish-flu

‘கோவிட் 19 ஓர் உலகளாவிய நோய்த்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து ஆறு மாதங்கள் ஆகின்றன. நாவல் கரோனா வைரஸ் பற்றிய அறிவியல் புரிதல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆனால், ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்கவில்லை – இந்த நோய்த் தொற்று எவ்வாறு முடிவுக்கு வரும்?

தற்போதைய அறிவியல் புரிதலின்படி, ஒரு தடுப்பூசிதான் இந்தக் கொள்ளை நோயை முடிவுக்குக் கொண்டுவரும். ஆனால், அந்த இடத்துக்குச் சென்று சேரும் பாதை இன்னும் நமக்குத் தென்படவில்லை. என்றைக்காவது ஒருநாள், எப்படியாவது இது நிச்சயம் முடிவுக்கு வந்துவிடும் என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

No description available.

ஸ்பானிய ஃபுளூ

வைரஸால் உருவான முந்தைய கொள்ளை நோய்கள் ஒரு முடிவை எட்டியிருக்கின்றன. 1918-1919-ல் பரவிய இன்ஃபுளூயன்ஸா நோயை (ஸ்பானிய ஃபுளூ) எடுத்துக்கொள்வோம். இருபதாம் நூற்றாண்டைப் பொறுத்த வரை அதிக உயிர்களைக் குடித்த கொள்ளைநோய் இது. 50 கோடிப் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள், குறைந்தது 5 கோடிப் பேர் பலியானார்கள்.

அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது வைரஸ்களைப் பற்றிய நமது அறிவும் தடுப்பூசிகளை உருவாக்கும் தொழில்நுட்பங்களும் பெருமளவில் மேம்பட்டிருக்கின்றன. ஆனாலும், அன்றைய காலத்தில் ஏற்பட்ட எதிர்காலத்தைப் பற்றிய தெளிவின்மை, இப்போது உலக அளவில் அழுத்தமாக இருக்கிறது.

கரோனா வைரஸ் முழுமையாக அழிக்கப்பட்ட பின்பும்கூட, சரியாக என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள அறிவியலாளர்களுக்கு சில ஆண்டுகள் தேவைப்படலாம். ஆகவே, இந்தப் புதிர் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இப்போதைக்கு நிச்சயமாகத் தெரிந்தது ஒன்றுதான்: அந்த நோய்க்கிருமியால் போதுமான அளவில் புதியவர்களைக் கண்டறிந்து பரவ முடியாவிட்டால், நோய்த்தொற்று முடிவுக்கு வந்துவிடும்.

குளிர்காலத்தில் பெருக்கம்

No description available.

1918 கொள்ளைநோயைப் பொறுத்தவரை, 1919-ம் ஆண்டின் வசந்த காலத்தில் அது முடிவுக்கு வந்துவிட்டதாகவே உலகம் நினைத்தது. ஆனால், 1920-ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் கொள்ளை நோய் உச்சத்துக்குச் சென்றது. “மற்ற ஃபுளூ வைரஸ் வகைகளைப் போலவே, ஸ்பானியக் காய்ச்சலும் குளிர்காலத்தில் அதிகரித்திருக்கக்கூடும். குளிர்காலத்தில் மக்கள் அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள், ஒரே வீட்டுக்குள் அருகருகே அதிக நேரம் செலவிட்டார்கள்.

குளிர்காலம் பின்வாங்கும்

1920-ம் ஆண்டின் மத்தியில் பல இடங்களில் தானாகவே இந்த உயிர்க் கொல்லி நோய் முடிவுக்கு வந்தது. ‘இது முடிந்துவிட்டது’ என்றெல்லாம் யாரும் அறிவிக்க வில்லை. மெது மெதுவாக நோயின் வீரியம் மங்கிப்போனது.

ஒலிவியா பி.வேக்ஸ்மேன்

எப்படி நடந்தது?

“முதலில் அந்த வைரஸ் உலகம் முழுவதும் சுற்றியது, பலரைத் தொற்றியது. ஒரு கட்டத்தில் புதிதாகத் தொற்றுவதற்கோ வைரஸை மீண்டும் பரப்புவதற்கோ போதுமான அளவில் தொற்றால் பாதிக்கப்படாத மனிதர்கள் இருக்கவில்லை. இப்படித்தான் அந்தக் கொள்ளை நோய் முடிவுக்கு வந்தது. அதாவது நோய்த் தடுப்பாற்றலைப் பெற்ற மக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிவிட்டால், தொற்று தானாகவே வீரியத்தை இழந்து விடும். வைரஸால் புதிய மனிதர்களிடம் நோயைப் பரப்ப முடியாது. கொள்ளை நோய் முடிவடையும் காலத்தில் வெளியில் வந்து புழங்குபவர்களில் பெரும்பாலோர் நோய்த் தடுப்பாற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள். அதனால், வைரஸால் யாரையும் புதிதாகத் தொற்ற முடியவில்லை”என்கிறார் மருத்துவ வரலாற்று மையத்தின் துணைத் தலைவரான ஜே.அலெக்சாண்டர் நவாரோ.

இவர் குறிப்பிடுகிற சமூக நோய்த் தடுப்பாற்றல் (Herd immunity) பற்றி இன்றைக்குப் பரவலாக விவாதிக்கப் படுகிறது. ஒரு கொள்ளைநோய் முடிவுக்கு வரும்போது, உலகின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும். (இப்போது உலக மக்கள் தொகையில் 0.5% மனிதர்கள் மட்டுமே கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி யிருக்கிறார்கள்)

No description available.

அதிகமான எண்ணிக்கையில் மக்களிடையே தொற்றியதாலும் நோய்த் தடுப்பாற்றல் பரவியதாலும் மட்டுமே 1918 கொள்ளைநோய் முடிவுக்கு வந்துவிடவில்லை. சமூக/தனிமனித இடைவெளியும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். இன்றைய காலகட்டத்தைப் போலவே வைரஸ் வீரியமாகப் பரவாமல் தடுப்பதற்காகப் பொதுநலம், சுகாதாரம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, நோய்த் தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்து வது, அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற வணிகத்தளங்களையும் பள்ளிகளையும் பொது இடங்களையும் மூடுவது என வைரஸ் பரவுவதற்கான வழிகளைத் துண்டிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட விதிகள் இவை.

தாமதப் புரிதல்

அமெரிக்க மருத்துவக் கூட்ட மைப்பின் இதழில் 2007-ல் மார்க்கெலும் நவாரோவும் இணைந்து ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளனர். அந்தக் கட்டுரையில், மேலே குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தி, விதிமுறைகளைத் தளர்த்தாமல் நெடுங்காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட நகரங்களில் ஒப்பீட்டளவில் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சில விதிமுறைகளைக் காலம் தாழ்த்தி நடை முறைப்படுத்திய நகரங்கள், கொடிய பின்விளைவுகளைச் சந்தித்தன.

No description available.

பொது சுகாதார அதிகாரிகள், அச்சுறுத்திக்கொண்டிருப்பது வைரஸா பாக்டீரியாவா என்று உறுதியாகத் தெரியாமலேயே எல்லா வழிமுறைகளையும் கடந்த நூற்றாண்டில் கடைப்பிடித்தார்கள். இன்ஃபுளூயன்ஸா நோய்த்தொற்று ஏற்படுவது பாக்டீரியாவால் அல்ல, தொற்றுக்கு வைரஸ்தான் காரணம் என்பதே 1930களில்தான் உறுதி செய்யப்பட்டது!

1918 கொள்ளைநோய்க்குக் காரண மான வைரஸின் மரபணு வரிசையைக் கண்டறியும் பணி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. 2005-ல் நேச்சர், சயின்ஸ் அறிவியல் ஆய்விதழ்களில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

No description available.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, வேறு ஒரு வைரஸால் இன்னொரு கொள்ளை நோயை உலகம் எதிர்கொண்டிருக்கிறது. மார்க்கெல் சொன்னதுபோல, குறிப்பிட்ட பருவகாலத்தில் அதிகரிக்கும் ஃபுளூ வகையாக இருந்ததால் நாம் எதிர்பார்த்த விதத்திலேயே 1918 கொள்ளைநோய் முடிந்துபோனது. ஆனால், இப்போதைய கொள்ளைநோய்க்குக் காரணம் இன்ஃபுளூயன்ஸா வகை வைரஸ் அல்ல. குளிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இன்ஃபுளூயன்ஸாவுக்கு முற்றிலும் எதிர்மாறாக, அமெரிக்காவில் கோடைக் காலத்தில்தான் கோவிட்-19 உச்சத்திலிருந்தது.

நோய்த்தொற்றை ஏற்படுத்துவது நாவல் கரோனா வைரஸ் என்பதால், அது எப்படியெல்லாம் செயலாற்றுகிறது என்பதை அறிவியலாளர்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ள வில்லை.

தடுப்பூசியும், குறிப்பிட்ட சதவீதத்தி னருக்கு நோய் பரவியிருந்தால் மட்டுமே கோவிட்-19 முடிவுக்கு வரும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை. இதற்கிடையில் நோயின் பாதிப்பைக் குறைக்க மக்களும் உதவ முடியும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பொது நலம், சுகாதாரம் பற்றிய முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் உயிர்களைக் காப்பாற்றின. இன்றும் அவை நமக்குக் கைகொடுக்கும்.

தகவல் ஆதாரம்: டைம் இதழ்

சுருக்கமாகத் தமிழில்: நாராயணி சுப்ரமணியன்

மொழிபெயர்ப்பாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com

நன்றி – தமிழ் இந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More