Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கமலா ஹாரீஸ் அவர்களே உங்களுக்கு இசைப்பிரியாக்களை தெரியுமா? | தீபச்செல்வன்

கமலா ஹாரீஸ் அவர்களே உங்களுக்கு இசைப்பிரியாக்களை தெரியுமா? | தீபச்செல்வன்

4 minutes read

‘‘சமத்துவம், விடுதலை, நீதிக்காகப் போராடிய பெண்கள், குறிப்பாகக் கறுப்பினப் பெண்கள் பெரிதும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், அவர்கள் தான் நம்முடைய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. அப்படியான ஒருவராக அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். ஆனால், நிச்சயமாகக் கடைசிப் பெண்ணாக இருக்க மாட்டேன்” இது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மகலா ஹாரிஸ் குறிப்பிட்ட விசயம்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் என்பது, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்க்குமொரு தேர்தல். உலக நாடுகளின் அரசியலில் அமெரிக்காவின் அரசியல் கடுமையான தாக்கத்தை செலுத்துவதுதான் இதற்கு காரணமாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜானாதிபதி டொனால்ட் டரம்ப் ஒரு கோமாளித் தலைவராக தனது அரசியலை முடிக் கொண்டுள்ள அதே தருணத்தில் புதிய தலைவரான ஜோ பைடன் குறித்த எதிர்பார்ப்பு உலகின் பெரும்பாலான நாடுகளில் நிலவியது.

இந்த நிலையிற்தான் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள தருணத்தில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய தாயிற்கும் கறுப்பின தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா ஹாரிஸை தமிழ்ப் பூர்வீகக் பெண் என உலகத் தமிழினம் பெருமை கொள்ளுகின்றது. தமிழர்கள் மாத்திரமின்றி, உலகில் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக கமலா ஹாரிஸை ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் வாஞ்சையுடன் எதிர்நோக்குகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க ஈழத் தமிழர்களும் அடங்குகின்றனர்.

இந்தியாவில் மத்திய அரசில் பணியாற்றிய கோபாலன் என்பவரின் மகள்தான் சியாமளா கோபாலன். இவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று, ஜமாக்காவைச் சேர்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். சியாமளா கோபாலன் அமெரிக்காவில் சிறந்த மார்பகபுற்றுநோய் நிபுணராகவும் மனித உரிமையாளராகவும் விளங்கியுள்ளார். அவரது இரண்டு மகள்களில் ஒருவர்தான் கமலா ஹாரிஸ்.

தனது தாயின் பூர்வீகத்தையும் தாத்தாவின் நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகொள்ளும் கமலா ஹாரிஸ் தன் ஆளுமைக்கும் உயர்வுக்கும் அவர்களை தொடர்பு படுத்தியும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அரசியலில் தடம் பதித்த முதல் கறுப்பின பெண் என்று அமெரிக்கர்களால் மாத்திரமின்றி உலக மக்களாலும் கமலா ஹாரிஸ் பெருமை கொள்ளப்படுகின்றார். வெள்ளை மாளிகையில் கம்பீரமாகப் பதவியேற்கப்போகும் முதல் கறுப்பின, முதல் ஆசியப் பெண் என்ற பெருமைகளும் இவரைத் தொட்டு நிற்கின்றன.

தன்னை ஒரு கறுப்பின பெண்ணாகவே அடையாளப்படுத்துகிறார் கமலா. ஆபிரிக்க இனத்தவராக தனது தந்தை இருப்பதனால் மாத்திரம் அவர் இதனை குறிப்பிடவில்லை. கமலாவின் தாய் இந்து மதம்.   தந்தை கிறிஸ்தவர். இனம், மொழி, சமயம் கடந்து உலகின் ஒடுக்கப்பட்டவர்களின், கறுப்பின பெண்களின் அடையாளமாக பன்மைத்துவத்தை கொண்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். சிறிய வயதில் இருந்தே மனித வாழ்வின் பொது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு பெண்ணாகவே கமலா வளர்க்கப்பட்டுள்ளார்.

ஹார்வெட் பல்கலைக்கழகத்தில் இளம்கலைமாணி பட்டத்தை பெற்ற கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார். மனித உரிமைகளுக்காக வாதிடுகின்ற சட்ட வல்லுநராகவும் இவர் உருவெடுத்தார். 2003இல் சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆகவும் 2010இல் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் பதவி வகித்த கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் முதல் கறுப்பினப் பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் பெற்றவர். 2016இல் அமெரிக்க செனட்டர் ஆகும் இரண்டாவது கறுப்பினப் பெண் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான  கமலா ஹாரிஸ், ஒபாமா காலத்தில் பெண் ஒபாமா என்றும் அழைக்கப்பட்டார்.

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றவுடன் அதனை உலகத் தமிழர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் அவரது தாயின் பூர்வீக இடமான மன்னார்குடியிலும் மக்கள் கமலாவின் வெற்றியை கொண்டாடினார்கள். அதேபோன்று ஈழத் தமிழர்களும் அவரது வருகை தமக்கு நன்மை பயக்கும் என்று எண்ணி கொண்டாடுவதை அவதானிக்கவும் முடிகின்றது. தமிழ் தலைவரான இரா. சம்பந்தன், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றி, ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமையை வென்றெடுக்க உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதே வேளையில் தமிழர்கள் கமலா ஹாரிஸை கொண்டாடுவது அர்த்தமற்றது என்றும் ஒரு சிலர் வாதங்களை முன் வைக்கிறார்கள். அத்துடன் தமிழர்கள் எப்போதும் இப்படி அர்த்தம் இல்லாமல் உலக தலைவர்களை கொண்டாடுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். நவநீதம் பிள்ளை போன்றவர்கள் தமது பதவிக் காலத்தில் தமிழ் இனப்படுகொலைக்காக குரல் கொடுக்கவில்லை என்றும் பதவியில் இருந்து விலகிய பிறகே ஒப்புக்கொண்டாதாகவும் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸை நோக்கிய ஈழத் தமிழர்களின் குரல் எத்தகையது? உண்மையில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பை குறித்து கவனம் கொள்ளுவதற்கு கமலா ஹாரிஸ் தமிழ்ப் பெண்ணாகக்கூட இருக்கத் தேவையில்லை. அதேபோன்று தமிழ் பூர்வீகத் தொடர்பற்ற ஒரு பெண்ணாக கமலா ஹாரிஸ் இல்லாமல் இருந்தாலும் நாம் நமது இன அழிப்பு குறித்து அவரிற்கு தெரியப்படுத்துவதும் அதன் வழியாக சர்வதேச மட்டத்தில் நீதியை கோருவதும் மிகுந்த  நியாயம் கொண்டதே.

அரைகுறையாக தமிழில் பேசிய முத்தையா முரளிதரனை எதிர்க்கும் தமிழர்கள், தமிழிலேயே பேசாத கமலா ஹாரிஸை ஏன் ஆதரிக்கின்றனர் என்றுகூட இப்போது கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. முரளிதரன் தமிழில் மாத்திரமல்ல, ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஈழத் தாய்மாருக்கு எதிராகவும் ஈழ விடுதலைக்கு எதிராகவும் பேசியமைதான் இங்கு பிரச்சினை. கமலா ஹாரிஸ் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றி ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணாக பேச வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

புலம்பெயர்ந்த ஒரு மகளாக, தேசத்தை தத்தெடுத்தவராக, இனப்பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவராக, நிறவாத ஒடுக்குமுறைகளின் அநீதிப் பக்கங்களை அறிந்தவராக, மனித உரிமைக்காக குரல் கொடுப்பவராக இருக்கும் கமலா ஹாரிஸ் அவர்கள், ஒரு தமிழச்சியாக இசைப்பிரியாக்களை பார்க்கத் தேவையில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் பெண்களைக் பற்றியதாக அவர் அறிந்து கொண்டாலே போதும். ஒரு மாபெரும் இன அழிப்பில் பல நூற்றுக்கணக்கான இசைப்பிரியாக்கள் இனவழிப்பு பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட கதைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

தன்னை கறுப்பின பெண்களின் அடையளமாக அவர் கருதிக் கொண்டால், அவர்களின் விடுதலையையும் பாதுகாப்பையும் அவசியமான ஒன்றாக கருதிக் கொண்டால், இசைப்பிரியாக்களுக்காக அவர் குரல் கொடுக்க வேண்டும், இசைப்பிரியாக்களுக்கான நீதி என்பது உலகில் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்குமான நீதிதான்.  

தீபச்செல்வன்

உரிமை மின்னிதழுக்காக தீபச்செல்வன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பிரசுரிக்கிறது வணக்கம் லண்டன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More