Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சட்டம் ஒரு இருட்டறை! | மயூரனின் நினைவுகள் | ப. தெய்வீகன்

சட்டம் ஒரு இருட்டறை! | மயூரனின் நினைவுகள் | ப. தெய்வீகன்

5 minutes read

போதைப்பொருள் கடத்தல்காரனாக கைதுசெய்யப்பட்டு, சுமார் பதினொரு வருடங்கள் சிறைவைக்கப்பட்ட பின்னர், மரண தண்டனை தீர்ப்பு வழங்கியபோது “நான் திருந்திவிட்டேன், என்னை உயிரோடு வாழவிடுங்கள்” – என்று மன்றாட்டமாகக் கேட்டபோதும், அந்த இறுதி இறைஞ்சலை அடியோடு மறுத்துவிட்டு, இழுத்துச்சென்று சுட்டுக்கொலைப்பட்ட மயூரன் சுகுமாரன் இறந்த ஆறாவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தனது மரண தண்டனையை ரத்துச்செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றி, காலம் முழுதும் சிறையில் வைத்திருக்குமாறு வேண்டிய அவனது இறுதி கோரிக்கையை இந்தோனேஷிய அரசு சிரித்தபடி மறுத்தது.

2015 ஆம் ஆண்டு சித்திரை 29 ஆம் திகதி நள்ளிரவு காட்சிகள் நினைவுகளில் இன்னமும் அச்சத்தோடு நடுங்கியபடியே பதிவிலுள்ளன. சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு, பலியாடுகள்போல அந்த தனித்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டு, தூணில் கட்டிவைக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டான் மயூரன். தீவுக்கு இந்தப்பக்கம் குவிந்திருந்த ஊடகங்கள், அங்கிருந்து வந்த சவப்பெட்டியை பாய்ந்து பாய்ந்து படமெடுத்து ஒளிபரப்பின. உலகமே செத்துவடிந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வுதான் அந்த இருளின் இடைவெளியில் தெரிந்தது.

ஆஸ்திரேலிய பொலீஸாரினால் “போட்டுக்கொடுக்கப்பட்டு” இந்தோனேஷியாவில் வைத்து ஒன்பதுபேருடன் பிடிபட்ட மயூரன் சுகுமாரன், அன்று அகப்பட்டிருக்கவேண்டிய தேவையே இல்லை. இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருளை கடத்திவருவதற்கு, சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுவிட்டு, வேறொரு இடத்தில் நின்றுகொண்டிருந்த சமயம், ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் இந்தோனேஷிய பொலீஸாரிடம் அகப்பட்டுக்கொண்டுவிட்டார்கள் என்ற தகவலை கேள்வியுற்றவுடன், தன்னால் ஏற்பாடு செய்யப்பட்டவர்களுக்கு ஆபத்து என்று அறிந்து, அவர்களை மீட்கச்சென்றபோதுதான் அகப்பட்டுக்கொண்டான். தனது சகாக்கள் அகப்பட்ட செய்தி கேள்விப்பட்ட உடனேயே ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறியிருந்தால்கூட, சாவிலிருந்து தப்பியிருக்கலாம் என்று, பின்னர் வழக்கறிஞர்களே ஒப்புக்கொண்டனர். ஆனால், சாவு நமக்குள் இறங்குவதாக தீர்மானித்துவிட்டால் யார்தான் தப்பமுடியும்.

மயூரனது இறுதி நாட்களில் நான் எழுதிய ஆறு கட்டுரைகளில் கடைசிப் பதிவு வருமாறு –

மரணம் என்பது மனிதனுக்கு ஒருபோதும் விருப்பத்துக்குரிய நிகழ்வாக இருந்ததில்லை. சமரசமற்ற அந்த சம்பவம் இயற்கையாக நிகழும்போதே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதன், செயற்கையாக இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி, அராஜமாக அமுல்படுத்தப்படும் மரணங்கள் சாபவர்களைவிட சார்ந்தோரைத்தான் தவணைமுறையிலான சித்திரைவதைக்கு உள்ளாக்கிவிடுகின்றன.

அதுபோன்ற ஒரு மரணத்தின் பிடியில் ஆறுவருடங்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் அகப்பட்ட ஆஸ்திரேலியர்களான மயூரன் மற்றும் அன்ட்ரூவினால் இரண்டு தேசங்கள், அவர்களின் அனுதாபிகள் மற்றும் அரசியல்தலைவர்கள் என எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்ட நாட்களை ஆறு துப்பாக்கி ரவைகள் அமைதியாக நிறைவுசெய்திருந்தன.

எல்லா மரணதண்டனைகைளயும் போலவே, மயூரனின் மரணமும் அவனைவிட அவனது குடும்பத்தினரைத்தான் மிகப்பாரிய அளவில் தண்டனைக்கு உள்ளாக்கியது. அந்தப்பொதுவான வேதனையை – மயூரனின் உறவுகள் கண்ணீருடன் விடைகொடுக்கும் காட்சியை – உலக ஊடகங்கள் அனைத்தும் பதிவுசெய்துகொண்ட அவனது இறுதிநிகழ்வுகள், சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னிலையில் சிட்னியில் உணர்வுபூர்வமாக அன்று நடைபெற்றது.

“சட்டம் என்ன சொல்கிறதோ மற்றையவர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்கு தெரியாது, என் அண்ணன் எனக்கு ஹீரோ. அண்ணா! நீ போய் எனக்காக சொர்க்கத்தில் ஒரு இடமொதுக்கு! அங்கு உன் வீட்டில் எனக்கொரு ஆசனமும் தயார் செய்! நான் வந்து அதிலிருந்து நீ கீறும் படங்களை பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்” என்று இறுதிநிகழ்வில் மயூரனின் தங்கை பிருந்தா பேசும்போது அங்கு திரண்டிருந்த அரங்கமே கண்ணீர் வடித்தது.

“அண்ணா! உன்னை மீட்பதற்கு நான் என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதற்காக நான் இழந்தது எவ்வளவோ. அது உனக்கும் தெரியும். இருந்தாலும், உன்னை என்னால் காப்பாற்றமுடியாவில்லை. என்னை மன்னித்துவிடு” – என்று மயூரனின் தம்பி சிந்து அன்று பேசி முடிக்கும்போதுஇ அரங்கில் எவருமே தங்கள் உணர்வுகளைக்கட்டுப்படுத்தமுடியவில்லை. மயூரனின் தாயாரால் பேசமுடியவில்லை. சிந்துவின் தோள்களில் சாய்ந்தபடியே மயூரனின் உடலம் வைக்கப்பட்டிருந்த பேழையை பார்த்து விக்கி விக்கி அழுதார். அவ்வப்போது பேசுவதற்கு எடுத்த முயற்சிகளையும் அவரது கண்ணீர் விழுங்கிக்கொண்டது. அதைப்பார்த்த அரங்கமும் கண்ணீரால் நிறைந்துகொண்டது. மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவனுக்கு இவ்வளவு பேர் திரண்டு கண்ணீர் வடித்தது ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இதுதான் முதல்தடவையாக இருக்கக்கூடும்.

மயூரனின் வரைதல் கலைக்கு கடைசி வரை உறுதுணையாகவிருந்த சித்திரக்கலைஞர் பென் மயூரனின் நினைவுகளை பகிர்ந்துகொள்கையில் – “

“சிறையிலிருந்து மயூரன் வரைந்த முப்பதுக்கும் மேற்பட்ட வரைபடங்களை மெல்பேர்னில் கண்காட்சியாக ஒழுங்குசெய்து நடத்தியபோது, அந்தப் படங்கள் அனைத்தும் சுமார் 14 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்களுக்கு விற்பனையாகின. அந்த பணத்தில் மயூரன் இந்தோனேஸியாவில் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறையில் வரைகலைக்கூடம் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது அவனது ஆசை. அங்கு சிறைவைக்கப்படும் கைதிகளுக்கு அந்த கலைக்கூடத்தில் வரைதல் சொல்லிக்கொடுத்து தாங்கள் குற்றவாளிகள் என்ற மனநிலையை மாற்றி அவர்களை வாழ்வில் நல்வழிப்படுத்தவேண்டும் என்ற மயூரனின் விருப்பத்துக்கிணங்க இந்தப்பணம் சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது” – என்று பென் தனது இறுதி உரையில் நினைவுகூர்ந்தார்.

“மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு முன் நான் மயூரனுடன் பேசிய தொலைபேசி கலந்துரையாடல் இன்னமும் எனது நெஞ்சில் அழியாமல் உள்ளது. தொலைபேசி அழைத்தபோது, அந்த எண்ணை பார்த்தபோதே மயூதான் அழைக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். தொடர்பை ஏற்படுத்தியவுடன் ‘ஹலோ! நான் இங்கு மயூரன் பேசுகிறேன். நீங்கள் யார் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது சிறந்த சித்திரக்கலைஞரா பேசுகிறீர்கள்….’ – என்று தொடங்கிய மயூவின் வார்த்தைகள் இன்னமும் என் நெஞ்சில் ஆழமாக பதிந்துகிடக்கின்றன” – என்று கூறினார்.

உணர்வுபூர்வமான இந்த பதிவுகள் ஒருபுறமிருக்க –

“போயும் போயும் ஒரு போதைப்பொருட்கடத்தல்காரனுக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா? இவனால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ? இவனை கொன்றிருக்காவிட்டால் சீரழிந்திருக்கக்கூடிய குடும்பங்கள் எத்தனையோ? வாய் கூசாமல் இவர்களையெல்லாம்போய் ஏதோ சுதந்திரபோராட்ட வீரர்கள் கணக்கில் ஊடகங்கள் எழுதுவது அருவருப்பாக இருக்கிறது” – என்று மரணதண்டனைக்கு ஆதரவான தரப்பினரும் போதைப்பொருள் தடைக்கு ஆதரவானவர்களும் எதிர்வாதங்களை முன்வைத்துவருகிறார்கள்.

இதற்கு இந்தோனேஸிய அரச தரப்பினரும் நீதித்துறையினரும் நடந்து முடிந்த மரணதண்டனைக்கு முன்வைத்திருக்கும் வாதங்களை பார்ப்போம்.

இந்தோனேஸியா எனப்படுவது “போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோட்டை” என்று வர்ணிக்கப்படுகின்ற தேசம். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளுடன் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலான போதைப்பொருட்கடத்தல் கும்பல்கள், இந்தோனேஸியாவைத்தான் தளமாக கொண்டு இயங்குகின்றன.

உள்நாட்டில் மலிந்துபோயுள்ள போதைப்பொருள் வியாபாரத்தால், சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட சனத்தொகையுள்ள இந்தோனேஸியாவில் 45 லட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 16 லட்சம் பேர் போதைப்பொருளுக்கு தீராத அடிமையாகி உயிர்தப்புவதற்கு மிகக்குறைந்த அளவு சந்தர்ப்பமே உள்ளதாக இந்தோனேஸிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக திடுக்கிடும் தகவல், அந்த நாட்டில் தினமும் 40 முதல் 50 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள்.

“மயூரன் மற்றும் அன்ட்ரூ குழுவினர் இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சித்த சுமார் 4 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான போதைப்பொருள், சுமார் 8200 பேரின் வாழ்க்கையை சீரழித்திருக்கும்” – என்று இவர்களது வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் தேசிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்ட இந்த போதைப்பொருள் விவகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டத்தை நாட்டின் அரசமைப்பில் இணைத்துக்கொண்டது இந்தோனேஸியா. கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது இந்தோனேஸியாவில் மீண்டும் முனைப்படைந்திருந்தாலும் அதற்கு வேறு காரணம் ஒன்றும் ஆழமாக பொதிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ‘அல்வா’ போல ஒரு சர்ச்சைக்குள்ள விவகாரம் ஆட்சியை பிடிப்பதற்கான பிரதான பேசுபொருளாக இருக்கும். அந்த பருப்பை சரியாக வேகவைப்பவர்கள் ஆட்சியை பிடித்துக்கொள்வார்கள். இந்தோனேஸியாவை பொறுத்தவரை போதைப்பொருள் பிரச்சினையை கூறலாம்.

இந்தோனேஸியாவில் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பவர்களும் ஆட்சியை பிடித்ததும் தம்மை இறுக்கமான தலைவர்களாக மக்களுக்கு காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும், போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அம்பு வில்லோடு போர்க்கோலம் தரித்து தரிசனம் கொடுத்து மக்களின் வாக்குளை சுவீகரித்துக்கொள்வதற்கு வியூகம் அமைத்துக்கொள்வது வழமையாக தொடர்ந்துவருகிறது.

தற்போது ஆட்சியிலிருக்கும் ஆட்சியிருக்கும் ஜோக்கோ விடோடோவை பொறுத்தவரை இந்த பிரச்சினை அவர் ஆட்சிக்கு வந்தநாள் முதல் கழுத்தை வளைத்தபடியிருக்கும் விவகாரம் ஆகும். அதாவது, லஞ்ச – ஊழல் மலிந்து குற்றங்களால் பீடித்துப்போயிருந்த இந்தோனேஸிய அரச கட்டுமானத்தை மாற்றியமைத்து முற்றிலும் தூய்மையான மாண்புறு மக்களாட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆட்சித்தலைவராக மக்களால் கொண்டுவரப்பட்டவர்தான் தற்போதைய அரசுத்தலைவர் ஜோக்கோ விடோடோ. ஆனால், இவர் தனது நிர்வாகத்தில் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறார். பிரச்சினைகள் எழும்போது சண்டியன்போல களத்தில் இறங்கவேண்டாமா என்று எதிர்க்கட்சிகள் இவர் மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவந்திருந்தன.

அரசியல் பலிபீடத்தில் பலத்த எதிர்ப்புக்களை எதிர்நோக்கிவந்த ஜேகோ வுடோவுக்கு “பாலி 9 விவகாரம்” ஒரு பரிசோதனைப்பொருளாக அமைந்தது. மயூரன், அன்ட்ரூ விவகாரத்தில் அவர் தயவு தாட்சண்யம் பார்க்க தயாராக இருந்தாலும் அவரது அரசியல் இருப்பும் அமைச்சரவையும் அவரை சூழ்நிலைக்கைதியாகவே பணயம்வைத்திருந்தார்கள். இவ்வாறான ஒரு பொறிக்குள் இருந்துகொண்டு “போட்டுத்தள்ளுங்கடா” என்ற உத்தரவைத்தவிர வேறெதையும் உச்சரிக்க அவருக்கு வழியில்லை. இதுபோன்ற உள்நாட்டு அரசியல்சிக்கல்களின் விளைவும்தான் மயூரன் மற்றும் அன்ட்ரூ ஆகியோரது மரணம் ஆகும்.

சட்டம் ஒரு குருட்டறை!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More