Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மே 18 நாளும் தமிழர்களும் | பரமபுத்திரன்

மே 18 நாளும் தமிழர்களும் | பரமபுத்திரன்

3 minutes read

வாழ்விடங்களை இழந்து, உணவு, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள வழியின்றி, எப்படியாவது உயிர் தப்பி இந்த உலகில் நாங்களும் உயிருடன் வாழவேண்டும் என்று ஆசை கொண்டு ஓடியொழிந்து, ஒதுங்கிப்பதுங்கிப் பயந்துநடுங்கி ஏதிலிகளாய், அன்றாட வாழ்வினையே கொண்டு செலுத்தக் கதியின்றி,  என்ன செய்வது என்று தெரியாது வெறுங்கையுடன் கலங்கிமயங்கி, அழுதுகுளறி, ஆறுதலுக்கு யாருமின்றித் தவித்து நின்ற ஈழத்தமிழ் மக்களை, தூரத்தே நின்று பாரிய ஆயுதங்கள், போர்க்கருவிகள்  மூலம் அரசபடைகள்வகை தொகையின்றிக் கொன்று குவித்த இறுதிநாட்களையும், அதற்கு முன்பாக சிறிதுசிறிதாக மற்றும்  கூட்டம்கூட்டமாக கொல்லப்பட்ட மக்களையும் நினைவூட்டும் குறியீட்டு நாளாக மே 18,  இனைக் குறிப்பிடலாம்.

தமக்கென நீண்ட கால வரலாறு இருந்தும்,குறித்த ஒரு  நிலப்பகுதியில் செறிந்து வாழ்ந்தும்,  தனித்த பண்பாடு, கலாசாரம் என்பவை கொண்டிருந்தும், தங்களுக்கு  நிரந்தரமானஒரு இன அடையாளம் இல்லாது,அரசியல் வலுவற்ற நிலையில் வாழ்ந்த ஈழத்தமிழர்கள், தங்களைநிரந்தரமாக வாழும் இனமாகவும், தங்களைத் தாங்கள் ஆளும் இனமாகவும், உலக அரங்கில் அரசியல் உரிமை உள்ள இனமாகவும்  உருவாக்க முயன்றகாலத்தில், உலகமே சூழந்து அவர்களின் எழுச்சியை நசுக்கி, அந்த இனத்தைக் கசக்கி,குருதியால் தோய்த்து, சாவுக்குரல்களை மட்டும் உயரே எழவைத்து, பயம், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் என்பவற்றை அவர்கள் மீது வலுவாகத் திணித்து, தமிழர்கள் நிரந்தரமான அரசியல் தோல்வியாளர்கள் என்ற எண்ணத்தை விதைத்து ஈழத்தமிழர்களைச் சிதைத்துச்சிதறடித்த நாள் எனவும் இந்த மே 19 நாளினைக் குறிப்பிடலாம்.

இந்த உலகம் தோன்றிய காலம் முதல்,நடந்து முடிந்த கதைகளையும், கடந்து வந்த வரலாறுகளையும்எடுத்து நோக்கினால் அங்கு புதிய சிந்தனையாளர்களை, அல்லது மனிதகுல நேசர்களை ஆளுமை செலுத்தும் தரப்பினர் நீண்டநாள்வாழ்விடவில்லை. இந்த உலகில் மக்களுக்காக வாழ்ந்தோர்,மக்களுக்கு நல்லவை நடக்க வேண்டும் என்று விரும்பியோர், உண்மைக் கருத்துகளை மக்கள் உணரக்கூடிய வகையில்  எடுத்துரைத்தோர் என்ற வரிசையில் ஒழுங்கமைத்தால் அவர்கள் ஏதோ ஒருவகையில் அரச எதிரிகள், மதஎதிரிகள், கோட்பாட்டு மறுப்பாளர்கள், மக்களுக்கு ஆபத்தானவர்கள், பயங்கரவாதிகள் இப்படி இன்னும் பல பெயர்கள் சூட்டப்பட்டுஅழிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பல உதாரணங்கள் சொல்ல முடியும். இதேவேளை அவர்களை களத்திலிருந்து அகற்றுவதற்கும் அரசுகள் ஒன்றுகூடும். இதற்கு ஒரு உதாரணமாக ஈழத்தமிழர்கள் தங்களை நிலைநிறுத்த உழைத்த காலத்தில் அவர்களுக்கு எதிராக இலங்கையினை ஆட்சி செய்த மக்களாட்சி அரசு மட்டுமல்ல, ஆளும் அதிகாரம் கொண்ட மக்களாட்சி மற்றும் சமவுடமை அரசுகளுமாக ஏறத்தாழ இருபது நாடுகளுக்கும் மேல் இணைந்துகொண்டன. தீவிரவாதம், பயங்கரவாதம் மக்களைக்  கொல்வதனைத் தடுக்கவேண்டும், ஆளும் அரசினைக் காப்பாற்ற வேண்டும் எனக்கூறி உயிருக்காக ஏங்கிய  மக்களில் பிறந்த குழந்தைகள் முதல் நடைதளர்ந்த வயதான பெரியவர்கள் வரை கண்ணீர் சிந்தித் தவித்து நின்றவேளையில் துடிக்கக் துடிக்கக்  கொல்லப்பட்ட நிகழ்வு ஈழத்தில் நடந்த நாளினை நம் கண்முன் நிறுத்தும் நாள்  மே 18 எனலாம்.

பிரித்தானிய ஆதிக்கம் உலகின் பெரும்பாகத்தை தமதாக்கிய பின்பு மக்களின் குடிபெயர்வும் பெருமளவில் நடக்கத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் தமிழர்களும் குடிபெயர்ந்திருக்கின்றார்கள். அது ஈழத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் நடைபெற்றுள்ளது. இப்படிக் குடிபெயர்ந்தோர் சிங்கப்பூர்,மலேசியா, மொரிசியசு, பீசித்தீவுகள்  போன்ற இடங்களில் வாழுகின்றனர். ஆனால் அவர்களின் மூன்றாவது சந்ததியினரே வேரறுந்தவர்களாக மாறிவிட்டார்கள். அவர்களில் தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்த தெரியாதவர்களும் அடங்கியுள்ளார்கள். இந்த நிலை ஈழத்தவர்களுக்கும் பொருந்தும் எனலாம். காரணம் ஈழத்தில் போர்க்காலகட்டத்தில் இறந்த போராளிகள் மட்டும் மண்ணை விரும்பியோர் அல்ல. ஈழப்போராட்டத்தில் சாவினைத் தழுவிய ஒவ்வொரு தமிழனும் மண்ணுக்காக உயிர் துறந்தவன்தான். ஈழத்துக்கு வெளியே ஈழத்தமிழ் இனத்தை நேசித்து  உயிர் துறந்தவர்கள் பெயரால் தமிழ்மக்களிடையே பிரிவினைகளே அதிகரிக்கின்றன. அத்துடன் ஈழத்தில் இருந்து குடிபெயர்ந்தோர் தாங்கள் மட்டுமே இந்த நிகழ்வுகளை செய்கின்றனர். சிலர் தமக்கு மட்டும் உரிமை உள்ளது என்றும் சொல்கின்றனர். ஆனால் இவர்களில் தமிழரின் செய்திகளை அடுத்த சந்ததிக்குச்  சொல்லவோ அல்லது உணர்த்தவோ விரும்பாதவர்களும் உள்ளனர். எனவே மேலே சொல்லப்பட்டது போன்று குடிபெயர்ந்தோர் வேரை மறக்கும் சந்ததியை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆகவே ஈழத்தில் வாழும் தமிழர்களே இதனைக்  கொண்டு செலுத்தும் பங்காளர்களாக இருக்கின்றனர். காரணம் அவர்கள் நேரடியாகத் துன்பத்தை அனுபவித்தவர்கள்.

தமிழர்களின் வரலாற்றில் மே 18 என்பது தமிழர்களின் விடிவுக்கான வழிகாட்டும் நாளாகவே அமையவேண்டும். ஆண்டாண்டு வீடுகளில் இறந்தவர்களுக்கு செய்யப்படும் ஆண்டுத்திவசம் போல இதுவும் அமைதல் எப்பலனையும் தராது. ஆனால் ஈழத் தமிழ்மக்கள்  வலுவான பொறிக்குள் அகப்பட்டவர்கள். அவர்களும் மக்களாட்சி என்று சொல்லி வாக்கு ஒன்று வேண்டும் வரை உரக்க சத்தமிடுபவர்களாலோ அல்லது இலங்கை அரசாலோ அல்லது பயங்கரவாதம் என்று புலிகளை அடக்க வந்த பிறநாட்டு அரசுகளாலோ எப்பயனும் பெறப்போவதில்லை. ஏனென்றால் ஈழத்தில் புத்தர்பெருமான்  நிலங்களைப்  பிடித்து தனக்கு இல்லம்  அமைப்பதையோ அல்லது தமிழர் நிலங்களில் குடியேற்றம் நடப்பதையோ அல்லது தமிழர் வளங்கள் பறிபோவதையோ  யாரும் முற்றாகத் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் ஆங்காங்கு போராட்டங்களை தொடக்கி மக்களைக் குழப்புகிறார்கள். இந்த நிலையில் மே 18 முக்கியத்துவம் என்ன என்று சிந்திக்கவேண்டியுள்ளது.

எங்கள் மக்கள் இறந்த செய்தி என்று தொடர்ந்து நாங்கள் சொல்வதால் மே 19 ஆல் தமிழருக்கு நன்மை ஏதும் விளையாது. பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் இன்னும் ஆறாத வலியுடன் தீராத வடுக்களுடன் வாழ்கின்றார்கள். எனவே மே 18 நாள் விருப்புடன் ஏற்று பொறுப்புடன் தமிழரின் இருப்பு நிலைக்கும் நாளாக அமைய உதவவேண்டும். அப்போதுதான் தமிழருக்காக, தமிழ் நிலத்துக்காக இறந்தவர் ஆன்மாக்களும் அமைதிபெறும்.

பரமபுத்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More