யாழ் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மருத்துவ வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆரம்ப காலங்களில் பாவிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறிய இடத்திலும் நேர்த்தியாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியின் சிறந்த முயற்சியிது. வைத்தியசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் அற்பணிப்புடன் செயல்வடிவம் கொடுத்துவருகின்றார்.
வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த முதலாவது மருத்துவர் அமெரிக்கர் என்பதும் வைத்தியர் கிரீன் ஆரம்பித்த முதல் மருத்துவக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் அங்கே கல்விகற்ற முதல் மருத்துவ தமிழ் மாணவர்களின் ஓவியங்களும் பெயர்களும் என பெருமளவான தகவல்கள் காணப்படுகின்றன.
ஆச்சரியம் தரும் பல விடயங்கள் இவ் அருங்காட்சியத்தில் பொதித்துள்ளன. குறிப்பாக1800களின் நடுப்பகுதியில் வைத்திய நூல்கள் தமிழில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சை நூல் ஓன்று “இரண வைத்தியம்” என்ற தலைப்புடன் காணப்படுகின்றது.இப்படிப் பல விடயங்கள் அங்கு இருக்கின்றன.
தமிழர் வரலாறுகளையும் மரபுரிமைகளையும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற விழிப்புணர்வு எல்லாத்துறைகளிலும் காணப்படவேண்டும். மருத்துவத்துறையில் எடுக்கப்படும் இம்முயற்சி மிகப்பாரிய பணி. பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கும், அபிவிருத்தி உத்தியோகத்தர் துவாரகனுக்கும் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.












