Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை “தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -4 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -4 | வதிலைபிரபா

3 minutes read

வதிலைபிரபா

“வட்டமேசை” பகுதியில் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் எழுதினாலும் எழுதினார்.. அதற்கான எதிர்வினை சற்றுக் கூடுதலாகவே இருந்தது.

குறிப்பிடத்தக்க எதிர்வினையாக கடமலைக்குண்டு இரா. தங்கப்பாண்டியன் “இன்றைய எல்லா பத்திரிகையாளர்களும் படிக்க வேண்டிய கட்டுரை இது. ஒரு படைப்பின் தன்மையை, அதன் தகுதியை மட்டும்தான் இதழாளர் பார்க்க வேண்டும். நல்ல கவிஞர்கள் பலர் எழுந்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களை வளர்க்க வேண்டும்” என்றார்.

கவிஞர். விக்ரமாதித்யன் நம்பியோ “இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் சரியாகவே சொல்லியிருக்கிறார்” என்றார் ஒற்றை வரியில். திருச்சி பாட்டாளி “இகுஞாதியின் கட்டுரை உடன்பாடுகளே. மாஸ் மீடியா நுழைவு வேட்கையின் களமல்ல சிற்றிதழ். அது ஒரு மாற்றுக கலாச்சாரத்தை நிறுவுவது” என்கிறார்.

பரன்குன்றாபுரம் பொன். தாமோதரன் “குமுதங்கள் எல்லாம் தங்களைச் சர்வதேசப் பத்திரிக்கை என்று எண்ணும்போது, சிற்றிதழ்கள் தங்களைக் குமுதங்களாக எண்ணிக் கொண்டு செயல்படுவதில் தப்பில்லை” என்றார்.

வலம்புரி லேனா சற்றுக் காட்டமாக “சிற்றிதழ்களைப் பிரபலமாவதற்கும், பெரிய பத்திரிகைகளில் இடம் பிடிப்பதற்குமாகத்தான் நேற்று முதல் இன்று வரை படைப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள்” என்கிறார்.

தேவகோட்டை கி. பார்த்திபராஜா “இகுஞாதி கருத்து சற்றுக் கசப்பானதுதான். ஆனால் அது உண்மையாயிற்றே” என்றார்.

இப்படிப் பல்வேறுபட்ட கருத்துகள், எண்ணங்கள் கடிதங்களாக வந்தன. சிலர் தாம் சார்ந்துள்ள அமைப்புகளைச் சுட்டிக்காட்டி நாங்கள் இதற்கு மாற்றுச் சிந்தனையாக இருக்கிறோம் எனத் தாம் சார்ந்துள்ள அமைப்புக்கு அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சி செய்தனர். சிலரோ நமக்கேன் வம்பு எனக் கடந்து சென்றனர். காலங்காலமாக இந்தச் சிற்றிதழ்கள் மட்டுமல்ல தமிழ் இலக்கியமும் இப்படித்தான் எதிரும் புதிருமான பயணங்களில் இருக்கின்றன. ஒரு இரயில் வண்டியாக பலரையும் ஏற்றிக்கொண்டு இந்தச் சிற்றிதழ்கள் சலனமின்றிச் சென்று கொண்டிருக்கின்றன. இதில் பயணிகள்தான் பலவிதம். “யாரவன் கூச்சல் போடுறவன்” என்று கேட்டுவிடாதீர்கள். உங்களுக்குப் பயணம் முக்கியம். இன்னும் சில மணித்துளிகளில் நீங்கள் இறங்கி விடுவீர்கள். பயணம்தான் இலக்கு. மனித வாழ்க்கையே அப்படித்தான் இருக்கிறது. இலக்கியம் மட்டுமென்ன விதிவிலக்கு.

இதனைச் சரியாகப் புரிந்துகொண்டதால் உருவானது ஓர் எதிர்வினை. அதான் “துட்டிலக்கியம்”. மகாகவியின் அடுத்தடுத்த இதழ்களில் ‘வட்டமேசை’ பகுதியைத் தொடர்ந்து “துட்டிலக்கியம்” பேசுபொருளானது. பலரும் பேசினர். மகாகவியும் பேசியது. 1996 ஆகஸ்ட் இதழின் தலையங்கத்தில்…
“தற்கால இலக்கியம் சுருக்கப்பட்டு, சுயநலக்கோட்டில் நடக்கிறது. தற்கால இலக்கியமானது சாதிய இலக்கியம், மத இலக்கியம், புகழிலக்கியம் இப்படித்தான் கம்பீரமாக நடைபோடுகிறது. இன்றைய இலக்கியப் பாதையின் மறுமுனை இருட்டை நோக்கிச் செல்கிறதோ என்கிற அச்சம் இருக்கிறது. இந்த நிலைமையில் புதிய இலக்கியம் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. இலக்கியத்தில் துட்டு பணம்) பண்ணுவது பற்றி விளக்கம் தருகிறது. நிறையப் பேர் பிழைக்கிறார்கள். அதான் “துட்டிலக்கியம்” என்று விளக்கம் கொடுத்தோம்.

இந்த “துட்டிலக்கியம்” பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது. 1996 களில் “மகாகவி” பலராலும் வாசிக்கப்பட்ட ஓர் சிற்றிதழாக இருக்கக் காரணமான இந்த அதிர்வுகள் அடங்கச் சில காலம் ஆனது.

வதிலை பிரபா

தமிழ்நாட்டை சேர்ந்த கவிஞர் மற்றும் சிற்றிதழ் ஆசிரியர்

முந்தைய தொடர்கள்

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் – 3 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 2 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 1

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More