Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 2 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 2 | வதிலைபிரபா

4 minutes read

தமிழ் இலக்கியப் பரப்பில் சிற்றிதழ்கள் அளித்த காத்திரமான பங்களிப்பு குறித்து பதிவு செய்யும் வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த கவிஞரும் சிற்றிதழ் ஆசிரியருமான வதிலைப் பிரபா வணக்கம் இலண்டனுக்காக எழுதும் தொடரை மகிழ்வுடன் பிரசுரம் செய்கிறோம்.

ஆசிரியப் பீடம்

ஆக்கம் – வதிலைபிரபா (தமிழ்நாடு)

சிற்றிதழ்களின் போக்கு பற்றி எதுவும் தெரியாத காலம் அது. எழுதுவதும் எழுதியது பிரசுரம் ஆவது பார்த்துப் பரவசமடைவதும் என்றுமட்டுமே இருந்த காலமது. சிற்றிதழ்கள் என்ன செய்கின்றன? அதன் செயல்பாடுகள்தான் என்ன என்றெல்லாம் யாரேனும் கேட்டால் விழிபிதுங்கி நிற்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. பல்வேறு சிற்றிதழ்கள் உள்ளூர் எழுத்தாளர்களுக்குக் களமாகத் தளமாக இருந்தன. வாய்ப்புக் கிடைக்காதவனுக்கு உள்ளூரில் ஒரு மைதானம் கிடைத்தால் என்ன செய்வான்.. என் நிலையும் அதுதான். தியாகி சுப்பிரமணிய சிவா இதழும் உள்ளூர் எழுத்தாளர்களுக்குக் களமாக இருந்தது. அதைத் தாண்டி வெளியூரிலிருந்து வெளியாகும் இதழ்களில் படைப்பு பிரசுரமாவது குதிரைக் கொம்புதான். இப்படியான இதழ்களில் அவ்வளவு எளிதில் இடம்பெற முடியாது.

நான் எழுதுகிறவைகள் சிறந்தவையா என்பது முக்கியமல்ல. பிரசுரமாக வேண்டும் அவ்வளவே. இது புரிதலற்ற புரிதல்தான். ஆனாலும் படைப்பு பற்றிய நம்பிக்கை இருந்தது.. அப்போது இன்னும் சில சிற்றிதழ்களில் தொடர்பும் ஏற்பட்டது. பல்வேறு சிற்றிதழ்கள் என் வாசல் வந்தன. கூடவே என் படைப்புகளும் வந்தன. உள்ளூரில் மகாகவி பாரதி இலக்கியப் பேரவை அமைப்பின் செயலாளர் ஆனேன். பின்னர் மகாகவி பாரதி முற்போக்கு இலக்கியப் பேரவை தொடங்கி செயலாளராக / நிறுவனராகப் பல்வேறு புதிய இளம் எழுத்தாளர்களை / கலைஞர்களை / பேச்சாளர்களை இனம் கண்டு அவர்களை வெளியே கொண்டு வந்தேன். சுப்பிரமணிய சிவா இதழில் பாரதி பக்கம் என்று சில பக்கங்களை ஒதுக்கித் தந்தனர். அது நான் கண்டெடுத்த இளம் படைப்பாளர்களுக்குக் களமாக அமைந்தது.

அப்போதும் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதுபற்றிய சிந்தனையும் இல்லை. பாரதி இயக்கம் – இதழ் – எழுத்து எனப் பயணம் தொடர்ந்தது. உள்ளூர் இதழான சுப்பிரமணிய சிவா இதழின் பல்வேறு தலையங்கங்களில் நான் முக்கிய இடம்பெற்றேன். அப்புறமென்ன சிறகு முளைத்தால் பறக்கணும்தானே! பறக்கத் தொடங்கினேன்..வானம் வசப்பட்டது. அன்றுதான் அந்தச் சந்திப்பும் நிகழ்ந்தது. அது இயல்பான சந்திப்பு. நண்பர் ரவிச்சந்திரன் நடத்திய வத்தலகுண்டு தமிழன் அச்சகத்தில் வழக்கம்போலப் பேசிக்கொண்டிருந்தேன். அன்று அது இலக்கியமாகவும் இருந்தது.. கூடவே இலட்சியமாகவும் இருந்தது. “ஏன் நீங்க ஓர் இதழ் தொடங்கக் கூடாது?” என்றார் நண்பர். அவரை உற்றுப் பார்த்தேன்.. அவரது கண்கள் விரிந்தன. எனக்குள்ளும் விரிந்தன இறக்கைகள். “சரிதான் ஆரம்பிக்கலாம்” என்றேன் நான். “மேட்டரை ரெடி பண்ணுங்க, நாளையே இதழைக் கொண்டு வரலாம்” என்றார்.

படபடவென்று நான்கு பக்கங்களுக்குப் படைப்புகளைத் தயார் செய்தேன். நண்பரிடம் கொடுத்தபோது அடடா இன்னும் இதழுக்குப் பெயர் வைக்கவில்லையே என்ற யோசனை வந்தது. மீண்டும் விவாதித்தோம். பாரதி பெயரில் இலக்கியப் பேரவை வைத்திருக்கிறோம். பாரதி பெயரிலேயே தொடங்கலாமே என்ற யோசனை எழுந்தது. பாரதி என்று எல்லோரும் வைக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசம் வேண்டும். மீண்டும் யோசித்தேன். “மகாகவி பாரதி” என்று சொல்லிப் பார்த்தேன். சற்று நேரத்தில் “மகாகவி” என்று என் உதடுகள் அனிச்சையாக உதிர்த்தன. மகாகவி என்று பலமுறை சொல்லிப் பார்த்தேன். மனத்துக்குப் பிடித்தது. மகாகவி என்றால் அவன் பாரதி மட்டும்தான் என்று எனக்கு நானே தலையாட்டிக் கொண்டேன்.

“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்” என்ற அறைகூவலோடு மகாகவி இதழ் அச்சேறியது. 1996 பிப்ரவரித் திங்கள் முதல் நாள் நான்கே பக்கங்களில் இதழ் வெளியானது. இதழுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஓரிரு மாதங்களில் இதழ் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. “அதென்ன உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்று சொல்கிறீர்கள். பாரதியின் கவிதைகளை இப்படிச் சிதைக்கலாமா என்று எழுதினார். முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். பின்னாளில் சிற்றிதழ்கள் சங்கத்தில் வல்லிக்கண்ணன் என்னை வழிநடத்துவார் என்று நான் அப்போது அறிந்திருக்கவில்லை. இதுவும் திட்டமிடாத ஒன்றுதான். பின்னர் “விதையினைத் தெரிந்திடு” எனும் பாரதியின் ஆத்திசூடி தாங்கியே இதழ் வெளிவந்தது.

பலரையும் நிமிர்ந்து பார்க்கச் செய்த “சிற்றிதழ்கள் மோசடிகள்” என்ற தொடர் கட்டுரை இதழில் வெளியிட்டது திட்டமிடாத ஒன்றுதான். “துட்டிலக்கியம்” என்ற தலையங்கம் வெளியானதும் அப்படித்தான். துட்டிலக்கியம் பெயர்க்காரணம் பற்றியும், இது புதிய சொல் என்றும் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. கம்பத்தில் நடைபெற்ற தமிழச் சிற்றிதழ்கள் சங்க மாநில மாநாட்டில் “துட்டிலக்கியம்” என்ற பெயரில் என்னை உரை நிகழ்த்த மாநாட்டு அமைப்பாளரான மறைந்த “அக்கினிக்குஞ்சு” இதழாளர் நண்பர் தோழர் இதயகீதன் அழைத்தார்.

ஒரு திட்டமிட்ட பயணம் திட்டமிடாமலே தொடங்கியது அப்போதுதான்.

“தமிழ்ச்செம்மல்” வதிலைபிரபா

கட்டுரையாளர் வதிலை பிரபா, தமிழ்நாட்டை சேர்ந்த இலக்கிய சிற்றிதழ் ஆசிரியர் மற்றும் கவிஞர்.

முந்தைய தொடர்கள்

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 1

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More