புலம்பெயர் சீக்கியர்களின் பொதுசன வாக்கெடுப்பு எதற்காக ?
இன-மத முரண்பாடுகள் தணிந்துள்ளதா
இன்றைய பஞ்சாபில் ?
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
நவம்பர் 2021 இல் ஐக்கிய இராச்சியத்தில் வலுவான அலைகளை உருவாக்கிய சீக்கிய மக்களின் காலிஸ்தான் பொதுசன வாக்கெடுப்பு இப்போது கனடா உள்ளூர் அரசியலில்
எதிரொலித்து வருகிறது.
இங்கிலாந்தில் 2021 நடந்த
காலிஸ்தான் வாக்கெடுப்பு:
இங்கிலாந்தில் நடந்ததைப் போலவே, கனடாவிலும் காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நடவடிக்கைகள் கனடாவில் உள்ள இந்தியா சார்பு பிரிவினரை எரிச்சலடையச் செய்துள்ளன. அவர்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பின்பற்றி, இந்த வாக்கெடுப்பை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியுள்ளார்கள்.
கனடாவில் நடைபெற்ற சுதந்திர சீக்கிய தாயகத்திற்கான “காலிஸ்தான் வாக்கெடுப்பு” கனேடிய அரசியலில் பலத்த சர்ச்சையை உருவாக்கியும்
உள்ளது. கடந்த வருடம் செப்டம்பர்
18-ம் தேதி கனடிய மண்ணில் சுதந்திர சீக்கிய தாயகத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
சர்வதேச வழக்கறிஞர் குழு ஆதரவுடன் இந்த வாக்கெடுப்பு, சீக்கியர்களின் சுயநிர்ணய உரிமைக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் சர்வதேச மனித உரிமைகள் வாதிடும் குழுவான “நீதிக்கான சீக்கியர்கள்” (SFJ) அமைப்பால் கனடிய சீக்கிய சமூகத்தில் செப்டம்பர் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
காலிஸ்தான் உருவாக்கம் :
காலிஸ்தான் (Khalistan movement) என்பது சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் அமைக்கப்பட்டது தான் காலிஸ்தான் இயக்கம்.
பஞ்சாபில் 1970களின் இறுதியில் தொடங்கிய கிளர்ச்சியானது காலிஸ்தான் கோரிக்கையாக எழுந்தது. கிளர்ச்சிக்கான அடிப்படைக் காரணங்கள் மிகவும் சிக்கலானவை. முதன்மைக் காரணங்களாக சீக்கியத்திற்கும் பஞ்சாபி மொழிக்கும் போதிய அங்கீகாரம் வழங்காததும் 1947இலிருந்து ஆட்சியிலிருந்த இந்தியக் காங்கிரசு அரசின் அக்கறையின்மை என பஞ்சாபிய
சீக்கியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்திமொழி திணிப்பு:
1950களில் பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளும் பஞ்சாபி மாணவர்களுக்கு இந்தி கற்பித்ததால் பெற்றோர்களும் சமூகத் தலைவர்களும் கவலையுற்றனர். மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் பஞ்சாபின் அலுவல்மொழியாக பஞ்சாபியை மீளமைக்கவும் பஞ்சாப் தனிமாநில இயக்கம் துவங்கப்பட்டது. பஞ்சாப் தனிமாநில இயக்கத்தை ஏப்ரல் 14, 1955 அன்று இந்திய அரசு தடை செய்தது.
இந்தக் காலகட்டத்தில் சீக்கியர்கள் பெரும் கேலிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாயினர் என்பதை மறுக்க முடியாது. அமைதிவழியில் போராடியவர்களும் அப்பாவி மக்கள் தடிகளாலும் கற்களாலும் அடிக்கப்பட்டனர்; பலர் கைதாயினர், சீக்கிய கோயில்களில் தேடுதல் வேட்டை நடந்து, சேதமாக்கப்பட்டது.
பஞ்சாப் மாகாணம் சீக்கியர்களின் பாரம்பரிய நிலப்பகுதியாகும். இந்திய நிலப்பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வருவருதற்கு முன் சுமார் 50 ஆண்டுகள் இப்பகுதிகளை சீக்கிய அரச பரம்பரையினர் ஆண்டனர். இந்திய பாகிஸ்தானிய பிரிவினைக்குப் பின் பெருமளவில் சீக்கியர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்திற்கு குடியேறினர்.
மொழிவாரி மாநில எழுச்சி:
பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் அடிப்படையில் அதிக சீக்கியர்கள் வகித்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என அகாலி தளம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இந்திய அரசு முதலில் இதை நிராகரித்தாலும் பின்னர் நடந்த தொடர் கோரிக்கைகளாலும் வன்முறைச் சம்பவங்களாலும் இந்திய ஒன்றிய அரசு இதற்கு உடன்பட்டது. ஆனால் தங்களுக்கு அதிக அதிகாரம் ஒன்றிய அரசால் தரப்படவில்லை என்ற காரணத்தால் காலிஸ்தான் தேசிய இயக்கம் தொடர்ந்து இயங்கி வந்தது. காலிஸ்தானுக்கு என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ஆதரவு திரட்ட முயற்சித்தது. 1980களில் காலிஸ்தான் அமைப்பால், காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்கப்பட்டு அதற்கெனத் தனி நாணயத்தையும் அஞ்சல் தலையையும் வெளியிட்டதும் அறிந்ததே.
கனேடிய சீக்கியர்களின் வாக்கெடுப்பு :
தற்போதை கனேடிய சீக்கியர்களை பரபரப்புக்கு உள்ளாக்கிய காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு பிரச்சாரத்தில், சீக்கியர்கள் “இந்தியாவால் ஆளப்படும் பஞ்சாப் ஒரு சுதந்திர நாடாக இருக்க வேண்டுமா?” என்பது புதுடெல்லியில் இருந்து கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது.
இந்திய ஊடகங்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் அதே வேளையில், இந்திய அரசாங்கம் காலிஸ்தான் மீதான வாக்கெடுப்பை “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தியுள்ளது.
அத்துடன் சர்ச்சைக்குரிய இவ்விடயத்தை UAPA சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் SFJ – சீக்கிய பொது வாக்கெடுப்பின் ஆதரவாளர்களை – ஒரு சட்டவிரோத அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது.
அலுவல் மொழியாக பஞ்சாபி :
1965ஆம் ஆண்டு இந்திய-பாக்கிஸ்தான் போருக்குப் பின்னர் 1966இல் பஞ்சாபி மொழி இறுதியாக அலுவல்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. கிழக்குப் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதிய மாநிலமான அரியானா மற்றும் தற்போதைய பஞ்சாபாகப் பிரிக்கப்பட்டது.
இருப்பினும் இது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவில்லை. சீக்கிய சமூகத்தினர் இந்தியாவிலிருந்து விலகியே இருப்பதாக உணர்ந்தனர். தங்கள் அனைத்துக் கோரிக்கைகளையும் இந்திய அரசுக்கு தெரிவித்தனர். 1973இல் சீக்கியர்கள் அனந்த்பூர் சாகிப் தீர்வை முன்வைத்தனர்.
இந்தத் தீர்மானத்தில் சமய பிரச்சினைகளும் அரசியல் பிரச்சினைகளும் அடையாளப் படுத்தப்பட்டிருந்தன. சீக்கியத்தை அங்கீகரிப்பதிலிருந்து இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களும் நடுவண் அரசின் அனுமதியை எதிர்நோக்காது மாநில அளவிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது வரை இதில் முன்மொழியப்பட்டிருந்தது. அனந்த்பூர் தீர்மானத்தை இந்திய அரசு நிராகரித்தது.
பிந்தரன்வாலா தலைமை:
இதனால் சீக்கிய சமயத் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா அகாலி தளத்துடன் இணைந்து 1982இல் காலிஸ்தான் இயக்கத்தை தொடங்கினர். அனந்த்பூர் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு அமைதிப் பேரணிப் போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். இந்த தீர்மானம் ஏற்கப்பட்டால் நீர்ப்பாசனத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்றும் சண்டிகர் பஞ்சாபிற்கு மீளவும் தரப்படும் என்றும் இவர்கள் நம்பினர்.
இந்தியாவில் காங்கிரசு அரசு இத்திரள் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயன்றது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இரண்டரை மாத காலத்தில் பாதுகாப்புப் படையினர் 30,000க்கும் கூடுதலான சீக்கியர்களை கைது செய்தனர்.
ஒப்பரேஷன் புளூஸ்டார்:
இதன்பிறகு பிந்த்ரன்வாலா ஆயுதப் புரட்சியே பெரும்பான்மை பஞ்சாபி மக்களுக்கு தீர்வைத் தரும் என்றது கிளர்ச்சி வேகமாக வளரக் காரணமாயிற்று.
யூன் 6, 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கையின்போது பிந்த்ரன்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்வினையாக அக்டோபர் 31, 1984இல் இந்திரா காந்தி அவரது மெய்காவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். இந்த இரு நிகழ்வுகளும் 1990கள் வரை பஞ்சாபில் நிலவிய சீக்கிய மற்றும் சீக்கியரெதிரான வன்முறைகளுக்கு பெரும் காரணங்களாக அமைந்தன.
இந்திராகாந்தி தலைமையிலான ஒன்றிய அரசு காலிஸ்தான் தேசியவாதிகளை புளூஸ்டார் நடவடிக்கையால் கட்டுப்படுத்தபட்டது. தற்போது பஞ்சாபில் இக்கோரிக்கை பரவலாகக் கைவிடப்பட்டுவிட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளாவிய வாக்கெடுப்பு:
இதுவரை உலகளாவிய ரீதியில் நடந்த காலிஸ்தான் வாக்கெடுப்பில் அக்டோபர் 31, 2021 அன்று இங்கிலாந்தில் இருந்து தொடங்கிய வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி முழுவதும் பல நகரங்களில் நடைபெற்று, சுமார் 450,000 சீக்கியர்கள் வாக்களித்துள்ளனர்.
பஞ்சாப் வாக்கெடுப்பு ஆணையம் (PRC), வாக்கெடுப்புகள் மற்றும் நேரடி ஜனநாயகம் குறித்த அணிசேரா நிபுணர்களின் குழுவானது, வாக்களிக்கும் நடைமுறையை வெளிப்படைத்தன்மையையும், சர்வதேச அளவிலான நேர்மையான தேர்தல் என இணங்கி உறுதிப்படுத்துகிறது.
காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளரான குர்பத்வந்த் சிங் பன்னுன், கனேடிய சீக்கியர்கள் காலிஸ்தானை உருவாக்குவதற்கான கோரிக்கையில் தாங்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளனர் என்றும், சீக்கியர்கள் சுயநிர்ணய உரிமையைக் கேட்கிறார்கள், இது ஐநா சாசனத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்; சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR),” என்று அவர் மேலும் கூறினார்.
காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும் – வீழ்ச்சியும்!
“தங்களுக்கான உரிமைகள் சரியான முறையில் கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே எங்களுக்கு தனி நாடுதான் வேண்டும்” என்ற போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. 1946-ம் ஆண்டு கல்கத்தா மாநாட்டின்போது, சீக்கியர்களுக்கான உரிமைகளைப் பாதிக்காதவண்ணம், சீக்கிய மக்களே தங்களின் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் கொண்டிருப்பார்கள் என நேரு அறிவித்தார்.
இந்த வாக்குறுதியினால் சீக்கியர்கள், தங்களுக்கு தனி நாடு கிடைத்து விடும். இப்போதைக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று எண்ணி, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டனர். ஆனால் அதன்பின்னர் ஒருங்கிணைந்த இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு, முன்பு உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என நேரு அறிவித்தார். இது சீக்கியர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனால் சீக்கியர்களுக்கான தனி நாடு என்ற முழக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.
அனந்தப்பூர் சாகிப்பில், காலிஸ்தான் தேசிய கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவரானார் ஜகஜித் சிங், அதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கென்று தனி ரூபாய் நோட்டுகளையும், தனி அஞ்சல் தலைகளையும் புழக்கத்துக்கு கொண்டு வந்தார். காலிஸ்தான் என்ற தனி அமைப்பு உருவாகி விட்டதாகவும் அறிவித்தார்.
இந்திராகாந்தி அதிரடி:
தனி நாடு இயக்கத்தில் இருந்த சீக்கியர்கள், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டும் வந்தனர். இதனால், பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில்தான், 1984-ம் ஆண்டு ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்ற அதிரடித் தாக்குதலை ராணுவத்தைக் கொண்டு அரங்கேற்றினார் அப்போது பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தி. சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வும், அவரது ஆதரவாளர்களும் பெருமளவில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, தலைமறைவாக இருந்தனர். அதுவரை இல்லாத நடைமுறையாக இந்திய ராணுவத்தினர், பொற்கோவிலுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி பிந்தரன்வாலே மற்றும் அவரது ஆதரவாளர்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்க நேரிட்டது.
காலிஸ்தான் இயக்கத்தினரின் கோபம்:
அமிர்தசரஸ் பொற்கோவிலில், பொதுமக்கள் கூடியிருந்த நேரத்தில், ராணுவத்தினர் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியதால், இந்திரா காந்தி மீது ஒட்டுமொத்த சீக்கியர்களும் கடுங்கோபம் அடைந்தனர். சீக்கியர்களின் இந்த கோபமே, பின்னர் இந்திரா காந்தியை படுகொலை செய்யும் அளவுக்குச் சென்றது.
தற்போது இந்தியாவில் சீக்கியர்கள் அனைவரும் அமைதியான முறையில், தேசிய ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்கள் என இந்திய அரசு கூறினாலும், புலம் பெயர் சீக்கிய மக்களால் நடைபெறவுள்ள சுதந்திர தாயகத்திற்கான “காலிஸ்தான் வாக்கெடுப்பு” கனேடிய அரசியலை மட்டுமல்ல, சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ள “காலிஸ்தான் வாக்கெடுப்பு” முடிந்து போன காலிஸ்தான் பிரச்சினையை மீண்டும் தூண்டிவிட்டு இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா