செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திரும்பவும் 3 மாதங்களுக்குத் தள்ளிப் போனது தமிழரசு வழக்கு!

திரும்பவும் 3 மாதங்களுக்குத் தள்ளிப் போனது தமிழரசு வழக்கு!

1 minutes read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு செப்டெம்பர் முதலாம் திகதிக்குத் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிராளிகளில் ஒருவராக இருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தப் பதவியில் இருந்து விலகிய நிலையில் காலமாகிவிட்டார். அவரது இடத்துக்கு மற்றொரு எதிராளியாகக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே.சிவஞானத்தைப் பதிலீடு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதோடு, அடுத்த வழக்குத் தவணைக்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இவற்றுக்கிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் என்ற பெயரில் சுப்பிரமணியம் சபாரத்தினம் என்பவர் சார்பில் தன்னையும் வழக்கின் ஓர் எதிராளியாகச் சேர்த்துக்கொள்ளக் கோரும் இடையேயீட்டு விண்ணப்பம் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டத்தரணி குருபரன் அதனைச் சமர்ப்பித்து வாதிட்டார்.

எதிராளிகளான சிறீதரன், யோகேஸ்வரன், குகதாசன் ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அதனை ஆட்சேபிக்கவில்லை. வரவேற்றார். ஆனால், சுமந்திரன் உள்ளிட்ட ஏனைய எதிராளிகளும் வழக்காளியும் அதனை ஆட்சேபித்தனர்.

தனக்காக நீதிமன்றத்தில் தானே முன்னிலையான எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ .சுமந்திரன், “இந்த வழக்கை முடிக்க விடாமல் இழுத்தடிப்பதற்காவே இவ்வாறு வழக்குத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் ஒருவரை இடையேயீட்டு எதிராளியாகச் சேர்க்க விண்ணப்பிக்கப்படுகின்றது.” – என்றார்.

மற்றைய எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தனும் அதேபோன்று ஆட்சேபனை முன்வைத்தார்.

அதனையொட்டி இரு தரப்பினரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, இந்த விடயத்தை ஒட்டி இரு தரப்பினரும் எழுத்து மூல ஆட்சேபனைகளைச் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும் படியும், அதன் பின்னர் நீதிமன்றம் அது தொடர்பில் உத்தரவு ஒன்றை வழங்கும் என்றும் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.