இங்கிலாந்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்தில் இப்படிப்பட்ட சிகிச்சையிலிருந்து பிறந்திருக்கும் முதல் குழந்தை அதுவாகும்.
இத்தகவலை, இலண்டனிலுள்ள Queen Charlotte’s and Chelsea மருத்துவமனை அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் திகதியன்று ஏமி (Amy) எனும் அந்தக் குழந்தை பிறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
வடக்கு லண்டனைச் சேர்ந்த 36 வயதான கிரேஸ் டேவிட்சன் (Grace Davidson), 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் போது, தனது மூத்த சகோதரி ஆமியிடமிருந்து கருப்பை உறுப்பை தானமாக பெற்றார். இந்நிலையில், அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது ஒரு பெரிய வரம் என்றும், குழந்தை பெற இயலாதவர்கள் எதிர்காலத்தில் சிகிச்சை மூலமாக குழந்தை பெற இது இன்னொரு வாய்ப்பு என்றும் கிரேஸ் பரவசத்துடன் கூறினார்.
36 வயது கிரேஸ், Mayer Rokitansky Kuster Hauser என்ற அரிய மருத்துவப் பிரச்சினையால் கருப்பை இல்லாமல் பிறந்தார்.
குழந்தையின் பிறப்பு, 25 ஆண்டுகளாக மருத்துவர்கள் ஆற்றிய ஆராய்ச்சியின் பலன் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதுவரை உலகளவில் 100க்கும் அதிகமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
உலகத்தில் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ஸ்வீடனில் 2013ஆம் ஆண்டு நடந்தது.
இந்த சிகிச்சையின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 50 ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளன.