அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், மினசோட்டா மாநிலத்தில் பணியாற்றி வந்த 700 குடிவரவு அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதன் பின்னர் அந்த மாநிலத்தில் சுமார் 2,000 அதிகாரிகள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து, தாய்நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆயுதங்களுடன் குடிவரவு அதிகாரிகள் மினியாபோலிஸ் நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற சோதனைகளின் போது குடிவரவு அதிகாரிகள் இரு பொதுமக்களை துப்பாக்கிச் சூட்டில் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையை சமாளிக்க மினசோட்டா மாநிலத்திற்கு எல்லைக் கொள்கைப் பிரிவுத் தலைவர் டாம் ஹோமன் அனுப்பப்பட்டார். 700 அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டாலும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். மேலும், மினசோட்டா காவல்துறையினர் தற்போது சட்டவிரோதக் குடியேறிகள் மீது அதிகமாக நடவடிக்கை எடுத்து வருவதால், குடிவரவு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.