செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பாடசாலையில் சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழப்பு: துப்பாக்கிதாரியும் சுட்டுக்கொலை

பாடசாலையில் சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழப்பு: துப்பாக்கிதாரியும் சுட்டுக்கொலை

1 minutes read

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூன்று சிறுவர்கள் மற்றும் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பெண்ட் நகரில் அமைந்துள்ள சில்வர் ரெயில் ஆரம்ப பாடசாலையில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இத்தாக்குதலை அடுத்து, அங்கிருந்த பொதுமகன் ஒருவரால் குறித்த துப்பாக்கிதாரி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூட்டப்பட்டிருந்த பாடசாலையின் கதவுகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த சந்தேக நபர், அங்கு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

உயிரிழந்த சிறுவர்கள் 05, 08 மற்றும் 11 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 7 வயது சிறுவன் ஒருவனும் 54 வயதுடைய ஆசிரியை ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபருக்கும் குறித்த பாடசாலைக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு காணப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.59 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினைத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சந்தேக நபர், கார் ஒன்றை நோக்கி நீண்ட துப்பாக்கியால் சுட்டதாகவே ஆரம்பகட்ட தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு அருகில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த சிவப்பு நிற உழவு இயந்திர வாகனம் (டிரக்) ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பாடசாலையின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு சந்தேக நபர் உள்நுழைந்தமை தொடர்பான அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச் சூடு ஆரம்பமானதை அவதானித்த பொதுமகன் ஒருவர், சந்தேக நபரைப் பாடசாலைக்குள் துரத்திச் சென்று அவருடன் போராடி அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவம் பதிவான மூன்று நிமிடங்களுக்குள் பொலிஸார் அங்கு விரைந்து, சந்தேக நபர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பின்னர் பாடசாலை வளாகத்தை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். தாக்குதல் நடத்தியவர் உள்ளூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் எனத் தெரிவித்த பொலிஸார், விசாரணைகள் தொடர்வதால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், சந்தேக நபர் அல்லது அவரைச் சுட்டுக்கொன்ற பொதுமகன் ஆகியோரின் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இந்த அர்த்தமற்ற துயரச் சம்பவத்தினால் தாம் பேரதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்துள்ளதாக உள்ளூர் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் குக் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 450 மாணவர்களும் 40 இற்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணியாற்றும் குறித்த பாடசாலை அமைந்துள்ள பெண்ட் நகரிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

அமெரிக்கப் பாடசாலை துப்பாக்கிச் சூடு தரவுத்தளத்தின்படி, கடந்த ஆண்டு அமெரிக்கப் பாடசாலைகளில் 235 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தையும் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை குறைந்தது 140 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.