லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவின் தளங்களை குறிவைத்து பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களின் பின்னணியில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மரணத்துக்குப் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும், இது லெபனானை கடும் அபாய நிலைக்கு தள்ளும் செயல் என்றும் லெபனான் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேல் லெபனானின் தென்பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதை அடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பு தேடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். நகரங்களும் கிராமங்களும் சேர்த்து சுமார் 50 பகுதிகளில் இருந்து உடனடியாக இடம்பெயருமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
இதனால் வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் தங்களது அடிப்படைப் பொருட்கள் மற்றும் படுக்கைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்து வருவதாகவும் AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
