இங்கிலாந்தின் சஃபோக் கிராமப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிலிருந்து காணாமல்போன 03 வயது சிறுவனை மீட்கும் நோக்கில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிராந்தம் பகுதியின் மெரியம் குளோஸில் அமைந்துள்ள சிறிய பூங்காவுக்கு உறவினர் ஒருவருடன் வருகை தந்த நோவா வூட்ஸ் என்ற சிறுவன், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் அங்கிருந்து திரும்பும் போது காணாமல்போயுள்ளதாக சஃபோக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பகுதியளவு செவிப்புலனற்ற, சுய இறுக்கம் கொண்ட, பேச முடியாத அச்சிறுவன், அருகிலுள்ள ஒழுங்கை வழியே புதிய குடியிருப்புத் பகுதியை நோக்கி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோவாவைத் தேடும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து கொண்டதுடன், அவசர சேவையினர் செவ்வாய்க்கிழமை மாலை வரை வீடு வீடாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். பொலிஸாரின் தகவலின்படி, வெள்ளை நிறத் தோலும் சுருள் செம்பட்டை தலைமுடியும் கொண்ட அச்சிறுவன் தனது பெயரை அழைத்தால் பதிலளிக்க மாட்டான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல்போகும் போது அவன் ப்ளூயி படம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற ரீ-சேர்ட், குறும்பாவாடை மற்றும் வெள்ளை வரிகளுடனான கறுப்பு நிற வேன்ஸ் காலணிகளை அணிந்திருந்தான்.
சிறுவனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பொலிஸார், இரவு வேளையில் தனிச்சையாகத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், பொதுமக்களின் அனைத்துத் தேடுதல்களும் பொலிஸாருடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். எசெக்ஸ் எல்லைக்கு அருகிலும் ஸ்டோர் நதி முகத்துவாரப் பகுதியிலும் ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டுத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பகுதி மக்கள் தத்தமது வீட்டுத் தோட்டங்கள், கொட்டில்கள் மற்றும் வெளிக்கட்டடங்களைச் சோதித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தேடுதல் நடவடிக்கை காரணமாக மானிங்ட்ரீ மற்றும் இப்ஸ்விச் இடையிலான ரயில் சேவைகள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட வேண்டும் எனப் பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பீட் பார்ட்ரிட்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
