செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் கார் மோதி இலங்கை வம்சாவளி மாணவி பலி: 68 வயது சாரதி கைது

இங்கிலாந்தில் கார் மோதி இலங்கை வம்சாவளி மாணவி பலி: 68 வயது சாரதி கைது

1 minutes read

இங்கிலாந்தின் வடக்கு லண்டன் பகுதியில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 16 வயதுடைய இலங்கை வம்சாவளி மாணவி ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி மெலிசா பிரேமரத்ன என இங்கிலாந்து பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஹைகேட் பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹைகேட் பகுதியிலுள்ள நோர்த் வீதியில் பாதசாரி ஒருவர் மீது கார் மோதியுள்ளதாக கடந்த வியாழக்கிழமை காலை 8:13 மணியளவில் இலண்டன் பெருநகர பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவசர மருத்துவப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சிகிச்சையளிக்க முற்பட்டபோதும், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாணவி பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பாடசாலை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், காரை செலுத்திய 68 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைகள் தொடரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான வாகனம் ‘அடிசன் லீ’ எனும் தனியார் வாடகை வாகன நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதுடன், பொலிஸாரின் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெலிசாவின் மறைவு தொடர்பில் கண்ணீர் மல்க நினைவுகூர்ந்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் தமது வாழ்க்கையின் வெளிச்சமாகத் திகழ்ந்தவர் எனவும், அவரது அன்பு, இரக்கம் மற்றும் உற்சாகம் எப்போதும் நினைவில் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதிவான சிசிரிவி காட்சிகள், வாகனங்களின் டாஷ்கேம் காட்சிகள் அல்லது கையடக்கத் தொலைபேசி வீடியோகள் இருப்பின், அவற்றை வழங்கி விசாரணைகளுக்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.