இங்கிலாந்தின் மேற்கு இலண்டனிலுள்ள நோர்த் கென்சிங்டன் பகுதியில் மின்சார சைக்கிளில் பயணித்த 24 வயது இளைஞர் ஒருவர் மோப்பட் (Moped) ரக சைக்கிள் மோதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மெட்ரோபொலிட்டன் பொலிஸார் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து இடம்பெறுவதற்கு முன்னதாக குறித்த மின்சார சைக்கிளை மோப்பட் செலுத்தி வந்த நபர் துரத்திச் சென்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நோர்த் போல் வீதியில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு அவசர தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலண்டன் அம்புலன்ஸ் சேவையின் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளிக்க முற்பட்ட போதிலும், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
விபத்தை ஏற்படுத்திய மோப்பட் (Moped) சாரதி சம்பவ இடத்தில் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும், சிசிடிவி கமரா பதிவுகள் மற்றும் பிற தடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவரை அடையாளம் காணும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இச்சம்பவத்தை அடுத்து தடயவியல் பிரிவினர் நோர்த் போல் வீதியை முற்றாக முடக்கி விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விசாரணைகளுக்கு தலைமை தாங்கும் துப்பறியும் தலைமை பரிசோதகர் நீல் ஜோன் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், என்ன நடந்தது என்பதை கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த நேரத்தில் அப்பகுதியில் மின்சார சைக்கிள் அல்லது மோப்பட் நடமாட்டத்தை அவதானித்த பொதுமக்கள் அல்லது மேலதிக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரையோ அல்லது கிரைம்ஸ்டாப்பர்ஸ் அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு அவர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.