அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அதிதீவிர Nor’easter புயலின் தாக்கத்தால் பாரிய வெள்ளப்பெருக்கு, மின்சாரத் தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி மாகாணங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் காற்றுடன் கூடிய அடைமழை மற்றும் ஆழ்கடல் அலைகளின் சீற்றம் காரணமாக அப்பகுதிகளிலுள்ள பல மில்லியன் மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. நியூயோர்க் நகரின் கரையோரப் பகுதிகள், லோங் ஐலண்ட் மற்றும் நியூஜேர்சியின் கரையோரப் பகுதிகள் கடல் நீர் உட்புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை திணைக்களம் எச்சரித்துள்ளது.
புயலின் கோரத் தாண்டவத்தினால் வீசிய கடும் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மாசசூசெட்ஸ், நியூயோர்க், நியூஜேர்சி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கான மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூயோர்க்கின் புரூக்ளின் பகுதியில் பலத்த காற்றுக்கு மரம் ஒன்று முறிந்து வீழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வானிலை சீர்கேடு தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமானங்கள் பல மணிநேர தாமதங்களை எதிர்கொண்டுள்ளன. அத்துடன், நியூயோர்க் சென்ட்ரல் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச இசை நிகழ்வுகள் மற்றும் பொஸ்டனில் நடைபெறவிருந்த பிரபல பாடகர் எட் ஷீரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய பொது நிகழ்வுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதால், அவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வீதிகளுக்கு வருவதை தவிர்க்குமாறும், வெள்ள நீர் தேங்கியுள்ள வீதிகள் ஊடாக வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும் மாகாண அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவசரகால அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.