இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியத்திலுள்ள நெடுஞ்சாலைகளில் பரீட்சார்த்தமாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன புதிய கண்காணிப்பு கெமரா முறைமையின் ஊடாக, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத ‘கோஸ்ட் பிளேட்ஸ்’ (Ghost plates) எனப்படும் போலி இலக்கத்தகடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக பிபிசி பனோரமா புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேகக் கட்டுப்பாடுகளை கண்காணித்தல், குறைந்த உமிழ்வு வலயங்களை (ULEZ) அமுல்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணித்தல் போன்ற பிரதான நடவடிக்கைகளுக்கு பொலிஸார் பயன்படுத்தும் தன்னியக்க இலக்கத்தகடு அடையாளம் காணும் (ANPR) கெமராக்களில் இருந்து தப்புவதற்காகவே இந்த சட்டவிரோத இலக்கத்தகடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் இலக்கத்தகடுகளை பதிவு செய்யும் 14,000 ANPR கெமரா கட்டமைப்புகள் காணப்பட்ட போதிலும், வாகன சாரதிகளின் இந்த நவீன மோசடி உத்திகளை தற்போதைய கண்காணிப்பு முறைமைகளால் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனிதக் கண்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், கெமராக்களின் கண்களில் சிக்காத வகையில் விசேட பிரதிபலிப்பு பிளாஸ்டிக் பொருட்களால் இந்த போலி இலக்கத்தகடுகள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன், மற்றுமொரு சட்டபூர்வ வாகனத்தின் இலக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் போலி இலக்கத்தகடுகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், எம்.ஏ.வி சிஸ்டம்ஸ் (MAV Systems) என்ற தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ள புதிய அதிநவீன கெமரா முறைமை மூலம் இந்த மோசடிகள் துல்லியமாக வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
லண்டனுக்கு வெளியே டார்ட்ஃபோர்ட் கிராசிங் பகுதியில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனையில், நாளொன்றுக்கு சராசரியாக 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத வாகனங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோல், M25 நெடுஞ்சாலைப் பகுதியில் நாளொன்றுக்கு பதிவாகும் போலி இலக்கத்தகடுகளின் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து 2,000ஆக உயர்வடைந்துள்ளதுடன், போக்ஸ்டோன் பகுதியில் உள்ள யூரோடனல் சோதனைச் சாவடிக்கு அருகில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறான போலி இலக்கத்தகடுகளின் பயன்பாடு வீதிப் பாதுகாப்பை மிக மோசமாகப் பாதித்துள்ளதுடன், கொடூர விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தனது மகனை இழந்த ஷரோன் கெனன் என்ற தாய் குறிப்பிடுகையில், கெமராக்களில் சிக்க மாட்டோம் என்ற தைரியமே சாரதிகளை அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தத் தூண்டுவதாகக் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிர்தப்பிய மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான லூயிஸ் பேக்கர், தனது வாகன இலக்கத்தகட்டை மறைக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டவிரோத இலக்கத்தகடுகளின் பரவல் மற்றும் அதன் பாரதூரமான தாக்கம் குறித்து முழுமையாக ஆராய்ந்து அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் தேசிய அளவிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து வாகனப் பதிவுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
