உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட், ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் உள்ள மூலோபாய டீசல் கையிருப்புகளை உடனடியாக சந்தைக்கு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க விவசாயிகள், கனரக வாகன சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் சுமையை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் இடம்பெற்று வரும் போரால் சர்வதேச எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அவசர ஆலோசனைகளை முன்னெடுத்துள்ளன.
உலக சந்தைக்கு நாளொன்றுக்கு சுமார் 1.2 முதல் 1.5 மில்லியன் பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக அமெரிக்கா விளங்குகிறது. எனவே, அமெரிக்க ஏற்றுமதி குறைக்கப்பட்டால் சர்வதேச சந்தையில் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக உள்நாட்டு எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவது முக்கிய அரசியல் விவகாரமாக மாறியுள்ளது. உள்நாட்டு சந்தையில் போதுமான டீசல் கையிருப்பை வைத்திருப்பதன் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என டிரம்ப் தரப்பு தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், ஒரு லீற்றர் டீசலின் விலை 199.79 பென்ஸாக பதிவாகியுள்ளது. எனினும், நாட்டில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் விநியோக கட்டமைப்பு ஸ்திரமாக இருப்பதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை, ரஷ்யாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் சீனாவின் எரிபொருள் ஏற்றுமதி குறைப்பு ஆகியவை உலகளாவிய எரிபொருள் சந்தையில் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.