இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் வாழும் யூத சமூகத்தினரை இலக்குவைத்து கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவர், நேற்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 36 வயதான சலாம் அஹ்மத்யான் மற்றும் 34 வயதான ரஹ்மான் சலேஹி ஆகிய இரு நபர்களே இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஈரானில் இருந்து இயங்குவதாக நம்பப்படும் நபர் ஒருவரின் நேரடி வழிகாட்டலின் கீழேயே சந்தேகநபர்கள் இருவரும் இந்த நாசகாரத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இரு ஈரானிய பிரஜைகளும் மென்செஸ்டர் யூத அருங்காட்சியகம் மற்றும் ஹீட்டன் பார்க் ஜெப ஆலயம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு மற்றும் கலாசாரத் தலங்களை உளவு பார்த்துள்ளதாக வழக்குத் தொடுநர்கள், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மேலும், இவர்கள் இருவரும் கைது செய்யப்படுவதற்கு முன்னர், நச்சு வாயுவான குளோரின் குண்டை தயாரிப்பதற்கான செய்முறை அறிவுறுத்தல்களைப் பெற்றிருந்ததுடன், வெடிகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான உதிரிப் பாகங்களையும் கொள்வனவு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தாக்குதல் நடத்துவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட இடங்களின் வரைபடங்கள் மற்றும் திட்டங்களை இவர்கள் மிக நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்டது.
வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்ட நீதிமன்று, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள், இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.