இங்கிலாந்தில் முன்னொருபோதும் வழக்கமான சிகரெட் பிடித்த பழக்கமில்லாதவர்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது மின்னணு சிகரெட் பாவனைக்கு (வேப்பிங்) மாறியுள்ளமை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் இத்தொகை சுமார் 9 இலட்சத்து 40 ஆயிரமாகப் பதிவாகியிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி இது ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.
குறிப்பாக, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை விடவும் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களே மின்னணு சிகரெட்டுகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இப்பிரிவினரில் சுமார் 16.4 சதவீதமானோர் தினமும் அல்லது அவ்வப்போது மின்னணு சிகரெட்டுகளை உபயோகிப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வழக்கமான சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. 2024ஆம் ஆண்டில் 5.3 மில்லியனாக இருந்த புகைபிடிப்போரின் எண்ணிக்கை 2025 இல் 4.9 மில்லியனாக, அதாவது நாட்டின் வயதுவந்தோரில் பத்தில் ஒருவராகக் குறைந்துள்ளது. அதேவேளை, மின்னணு சிகரெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5.4 மில்லியனாக உயர்ந்து வழக்கமான புகைபிடிப்பாளர்களின் எண்ணிக்கையை முந்தியுள்ளது.
புகையிலையின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு பெற்றுப் பலர் புகைபிடிப்பதை நிறுத்துவதால் சிகரெட் பாவனை குறைந்து வருவதாகச் சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மின்னணு சிகரெட் பாவனையானது வழக்கமான புகைபிடித்தலை விடப் பாதிப்பு குறைந்தது. எனினும், அதன் நீண்டகால விளைவுகள் குறித்து இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை எனத் தேசிய சுகாதார சேவை (NHS) தெரிவித்துள்ளது.
எனவே, சிகரெட் பழக்கம் இல்லாதவர்களும் 17 வயது அல்லது அதற்குக் குறைந்த வயதுடையவர்களும் ஒருபோதும் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் தேசிய சுகாதார சேவை எச்சரித்துள்ளது.