இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் பல பொதுத்துறை நிறுவனங்களில் முழுநேரப் பணிகளை இரகசியமாக முன்னெடுத்து, இலட்சக்கணக்கான பவுண்ட்ஸ் நிதியை மோசடி செய்த நபரொருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளன. கிழக்கு இலண்டனைச் சேர்ந்த காசிம் சௌத்ரி என்பவரே இவ்வாறு 09 மோசடிக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
இவர் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அரச துறையைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு முழுநேரப் பணிகளை ஒரே நேரத்தில் இரகசியமாக முன்னெடுத்து வந்துள்ளார். இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் உரிய நடைமுறைகளை மீறி, முறைகேடான வழிகளில் சுமார் 350,000 பவுண்ட்ஸ் நிதியை அவர் சம்பளமாகப் பெற்று மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வழக்கின் விசாரணை நடுவர் குழு முன்னிலையில் இடம்பெற்றதுடன், சுமார் 7 மணிநேரம் நீடித்த நீண்ட கலந்தாலோசனை மற்றும் விசாரணைகளின் பின்னர் நடுவர் குழு தனது தீர்ப்பை அறிவித்தது.
இதன்போது தவறான தகவல்களை வழங்கி முன்னெடுத்த 8 மோசடிக் குற்றச்சாட்டுகளிலும், உண்மைத் தகவல்களை மறைத்தமை தொடர்பான ஒரு மோசடிக் குற்றச்சாட்டிலும் காஷிம் சௌத்ரி குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு பிணை வழங்குவதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன், குற்றத்தின் தீவிரத் தன்மையைக் கருத்திற்கொண்டு அவருக்கு மிகக் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள நீதிபதி, தண்டனை விவரங்களை அறிவிக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.