இங்கிலாந்தில் உள்ள இரண்டாவது விமானப்படை தளத்திலிருந்தும் குறைந்தது 10 அமெரிக்க வான்படை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் திங்கட்கிழமை வெளியேறியுள்ளன. சஃபோக் பகுதியில் அமைந்துள்ள ஆர்.ஏ.எஃப் மில்டன்ஹால் (RAF Mildenhall) தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானங்கள், ஐரோப்பாவிலுள்ள பிற அமெரிக்க தளங்களுக்கும் ஸ்கொட்லாந்தின் பிரெஸ்ட்விக் விமான நிலையத்திற்கும் சென்றடைந்ததை பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு செய்த விமான கண்காணிப்பு தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ள போதிலும், பிபிசி அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக, ஈரான் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, க்ளூசெஸ்டர்ஷையரில் உள்ள ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்ட் தளத்திலிருந்து அமெரிக்கா தனது குண்டுவீச்சு விமானங்களை மீளப்பெற்றிருந்த நிலையில், சில வார இடைவெளியில் இந்த வெளியேற்றம் பதிவாகியுள்ளது.
விமானங்களின் இந்த இடமாற்றம் குறித்து கருத்து வெளியிட்ட இங்கிலாந்துப் பாதுகாப்பு அமைச்சு, பிற நாடுகளின் செயற்பாடுகள் குறித்து தாங்கள் வழக்கமாக கருத்து தெரிவிப்பதில்லை எனவும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப விமானங்களும் ஏனைய சொத்துகளும் தொடர்ந்து நகர்த்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
‘பிளைட் ராடர் 24’ தரவுகளின்படி, அமெரிக்க வான்படையின் கே.சி-135 (KC-135) ரக விமானங்கள் திங்கட்கிழமை முழுவதும் மில்டன்ஹால் தளத்திலிருந்து வெளியேறியுள்ளன. அவற்றில் இரு விமானங்கள் ஜேர்மனி மற்றும் இத்தாலியிலுள்ள அமெரிக்க தளங்களை நோக்கிப் பறந்தன. ஒரு விமானம் மீண்டும் மில்டன்ஹாலுக்குத் திரும்பி பின்னர் ஜேர்மனியின் ஸ்பாங்டாலேம் தளத்தில் தரையிறங்கியதுடன், மற்றைய விமானம் இத்தாலியின் ஏவியானோ தளத்தை சுற்றி வட்டமடித்துவிட்டு, ஸ்பாங்டாலேம் தளத்தை சென்றடைந்தது. தொடர்ந்து மேலும் 8 விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
அமெரிக்க விமானங்கள் ஐரோப்பிய தளங்களுக்கு நகர்த்தப்பட்ட போதிலும், இங்கிலாந்திலுள்ள விமானப்படை தளங்கள் பாதுகாப்பாகவே இருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்திலும் உலகெங்கிலும் உள்ள தங்களது தளங்களின் பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படுவதாகவும், பொலிஸார் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதமரின் உத்தியோகபூர்வ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
