2026ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் உலகளவில் காலரா நோய் தாக்கத்தால் 3,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் காலரா பாதிப்புகளை 90 சதவீதத்தால் கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் சார்ந்த பக்ரீரியா நோய்களுக்கான பிரிவுத் தலைவர் லோரென்சோ பெசோலியின், கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் இந்நோயினால் சுமார் 7,900 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது 1999ஆம் ஆண்டிற்குப் பின்னர் காலரா தொற்றினால் உலகளவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவான ஆண்டாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பான குடிநீர் மற்றும் நவீன கழிவுநீர் முகாமைத்துவக் கட்டமைப்புகளின் ஊடாக அதிக வருமானம் ஈட்டும் செல்வந்த நாடுகளில் பல தலைமுறைகளுக்கு முன்னரே காலரா முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், தற்போதைய மருத்துவ வசதிகளைக் கொண்டு மிக இலகுவாகவும் குறைந்த செலவிலும் குணப்படுத்தக்கூடிய இந்த நோய்க்கு உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காவிடின், சில மணித்தியாலங்களிலேயே உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது நிலவி வரும் ‘எல் நினோ’ வானிலை மாற்றம் காரணமாக காலரா நோய்த்தாக்கத்தின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
