செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா உயிருக்கு ஆபத்து என அவசர மருத்துவ சிகிச்சை கோரி நீதிபதிகளுக்கு இம்ரான் கான் கடிதம்

உயிருக்கு ஆபத்து என அவசர மருத்துவ சிகிச்சை கோரி நீதிபதிகளுக்கு இம்ரான் கான் கடிதம்

2 minutes read

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரித்து, அவசர மருத்துவ சிகிச்சையையும் முன்னைய நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறும் கோரி, நாட்டின் உயர்மட்ட நீதிபதிகளுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனது சட்டத்தரணி சல்மான் சஃப்தார் ஊடாக நேற்று (16) திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த திறந்த கடிதத்தில், தனது இரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளதால் மூளையில் இரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளதாக 74 வயதான இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

தனது இரத்த அழுத்தம் 130 இல் இருந்து 150 மற்றும் 170ஆக அதிகரித்து, நவம்பர் 10ஆம் திகதி 192 மற்றும் 193 என்ற அளவை எட்டியதாகவும், தனது இதயம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“74 வயதில், இந்தத் தொடர்ச்சியான நிலைமை என்னை நான் உயிருடன் திரும்ப முடியாத ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது” என இம்ரான் கான் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் உயர் நீதிமன்றம், மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் தலைமை நீதிபதிகளுக்கு முகவரியிடப்பட்ட இக்கடிதம், நவம்பர் 11ஆம் திகதி அடியாலா சிறைச்சாலையில் (Adiala Jail) கானுக்கும் அவரது சட்டத்தரணிக்கும் இடையில் நடைபெற்ற 3 மணித்தியாலச் சந்திப்பைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது.

2025 டிசெம்பர் 20ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் வரை தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினர், சட்டத்தரணிகள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான அனுமதி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், தனது வலது கண்ணின் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாகவும், இந்நிலைமை குறித்துத் தனது குடும்பத்தினருக்கோ அல்லது சட்டப் பிரதிநிதிகளுக்கோ அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மனைவி புஷ்ரா பீபியின் (Bushra Bibi) உடல்நிலை குறித்தும் தீவிர கவலை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர், விழித்திரை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து அவர் நிரந்தரமாகக் கண்பார்வையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

விசேட மருத்துவப் பரிசோதனைகளுக்காகத் தன்னை ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறும், குடும்பத்தினருடன் தொடர்ச்சியாகத் தொடர்புகொள்ள அனுமதிக்குமாறும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் ஓகஸ்ட் 18ஆம் திகதி உத்தரவிட்டிருந்த போதிலும், அவ்வுத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

2026ஆம் ஆண்டில் இதுவரை நான்கு தடவைகள் மாத்திரமே தனது சட்டத்தரணியைச் சந்திக்கத் தனக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், தனது மனைவிக்கு அவரது சட்டத்தரணியுடன் ஒரேயொரு சந்திப்புக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் தனது அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும், நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகளில் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதைத் தடுப்பதாகவும் இம்ரான் கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் விசேட சலுகைகளையோ அல்லது அரசியல் சலுகைகளையோ கோரவில்லை எனவும், உரிய மருத்துவ சிகிச்சையையும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதையுமே கோருவதாகவும் வலியுறுத்தியுள்ள அவர், “நான் உயிருடன் இருந்தால் மாத்திரமே எனது நிரபராதித்தனத்தை நிரூபிக்க முடியும்” என எழுதியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.