பாலஸ்தீனத்தில் 2027ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை நடத்துமாறு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 08 நாடுகள் பாலஸ்தீன அதிகார சபையிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், லக்சம்பேர்க், நோர்வே, போலந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பாலஸ்தீனத்தில் ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகள் தீர்வுக்கான வாய்ப்பைப் பாதுகாப்பதற்கும் சுதந்திரமான தேர்தல்கள் அவசியம் என 08 நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, நேற்று 28ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல் 2027 செப்டெம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே நாளில் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
காஸா பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக தேர்தல்களை நடத்துவதற்கான சாதகமான சூழல் இல்லை என பாலஸ்தீன விடுதலை அமைப்பின் நிர்வாகக் குழு இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
பாலஸ்தீனத்தில் இறுதியாக 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும், 2006ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றன. அதன் பின்னர் சுமார் இரண்டு தசாப்தங்களாக தேசிய அளவிலான தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சுதந்திரமானதும், நியாயமானதும், வெளிப்படையானதுமான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என 08 நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
மேலும், பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவும், அதன் நிர்வாக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பும், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான அதன் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

