இந்தியா அமெரிக்க வர்த்தக உறவு குறித்து பேச்சு

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நடைபெற்றுவரும் வர்த்தகப் பேச்சுவாா்த்தை விரைவில் நிறைவடையுமென அந்நாட்டுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சாந்து நம்பிக்கை  வெளியிட்டுள்ளார்.

இந்திய தொழிலக வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு தொடர்பாக  நடைபெற்ற காணொலி வாயிலான கருத்தரங்கில் தரன்ஜித் சிங் சாந்து  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணொலி வாயிலான கருத்தரங்கில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் வருடந்தோரும் 10 சதவீத அளவில் அதிகரித்து வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 11.25 இலட்சம் கோடி ரூபாய் அளவு அதிகரித்துள்ளது.

நடப்பு 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வர்த்தகத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா விளங்கி வருகிறது. எனினும், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் இன்னும் முழு அளவை எட்டவில்லை.

அதனை அடைவதற்கு இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது அவசியமாகும். அதைக் கருத்தில் கொண்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை விரைவில் நிறைவடையும் என்று நம்புகிறேன்.

அத்தகைய வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் முதலீடுகளையும் அதிக அளவில் ஈர்க்கும். அதன் காரணமாக இரு நாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்