ஏழ்மை ஒழிப்புக்கு அடிப்படை ‘ஜன் தன்’ திட்டம் | பிரதமர் மோடி

நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக அமுல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கான அடிப்படையாக ‘ஜன் தன்’ திட்டம் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘ஜன் தன்’ திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் “வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாதவா்களுக்கு அதை ஏற்படுத்தித் தரும் நோக்கில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜன் தன்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

ஏழ்மையை ஒழிப்பதற்காக நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு ‘ஜன் தன்’ திட்டம் அடிப்படையாக உள்ளது. இத்திட்டம் வாயிலாக கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர். பல குடும்பங்களின் வருங்காலத்துக்கான நிதிப் பாதுகாப்பை ‘ஜன் தன்’ திட்டம் உறுதி செய்துள்ளது.

‘ஜன் தன்’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியவா்களில் பெரும்பாலானோர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவா்களாகவும் பெண்களாகவும் உள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதற்காக அயராது உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜன் தன்’ திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்கு தொடங்கியவா்களில் 55 சதவீதம் பேர் பெண்கள் எனவும், 63 சதவீதம் போ் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்