தமிழகத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு அனுமதி!

மாநில பயணிகள் ரயில் சேவைக்கும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் மாவட்டங்களுக்குள் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 7ஆம் திகதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து குறித்த புதிய அறிவிப்பினை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளதுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

அந் வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வரும் ஏழாம் திகதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, வரும் ஏழாம் திகதிமுதல் மாநிலத்திற்குள் பயணிகள் இரயில் போக்குவரத்து செயற்பட அனுமதிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்