வார இறுதியில் தளர்வில்லா முழு ஊரடங்கு | புதுவை அரசு

கொரோனா பரவலை தடுப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை புதுவையில் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு புதுவை அரசு கடிதம் அனுப்பியுள்ளது.சனி, ஞாயிற்று கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு- மத்திய அரசிடம் அனுமதி கேட்டு புதுவை அரசு கடிதம்

புதுவை மாநிலத்தில் ஆரம்பகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பரவிய கொரோனா தொற்று கடந்த ஜூலை மாதம் முதல் அதிவேகமெடுத்து பரவி வருகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் நாளுக்கு சராசரியாக 350 முதல் 500 வரை தொற்று பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கதிர்காமம், ஜிப்மர் மருத்துவ மனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.

இதனால் இந்த மருத்துவ மனைகளில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகளை ஒதுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகின்றனர். இதுவரை 225-க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க அரசு இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பித்தது.

கடந்த 2 வாரமாக செவ்வாய்க்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதிவேகமாக கொரோனா பரவும் 32 பகுதிகளை கண்டறிந்து அங்கு உள்ளூர் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டது.

இதற்கு பொதுமக்களும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முதல் அமலாக வேண்டிய உள்ளூர் ஊரடங்கு கைவிடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா அதிகம் பரவும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை புதுவையில் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு புதுவை அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு அனுமதித்தால் இம்மாதம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும்.

ஆசிரியர்