கடும் எதிர்ப்புக்கு இடையே மும்பை வந்தடைந்தார் கங்கனா ரணாவத்


கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நடிகை கங்கனா ரணாவத் மும்பை வந்தடைந்தார்.கடும் எதிர்ப்புக்கு இடையே மும்பை வந்தடைந்தார் கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.

இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது.


மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனா கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதினார்.

இதையடுத்து, ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்’ என்று கங்கனா சவால் விடுத்தார்.

இந்நிலையில் தனது சொந்த மாநிலமான இமாசலப் பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார் கங்கனா ரணாவத். அவருடைய சகோதரியும் மேலாளருமான ரங்கோலியும் உடன் வந்துள்ளார்.

விமான நிலையத்தில் கங்கனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவசேனா தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இத்தகைய பாதுகாப்பைப் பெறும் முதல் பாலிவுட் பிரபலம் கங்கனா ரணாவத் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்