ஊரடங்கு உத்தரவு ஏழைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் |ராகுல்

ஊரடங்கு என்பது ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் அவ்வவ்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியிலேயே அவர் மேற்படி விமர்சித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ ஊரடங்கு நடவடிக்கை  கொரோனா வைரஸ் மீதான தாக்குதல் அல்ல. அது இந்தியாவில் உள்ள ஏழைகள் மீதான தாக்குதல். இது நமது இளைஞர்களின் எதிர்காலம் மீதான தாக்குதல். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்த தாக்குதலுக்கு எதிராக நிற்க வேண்டும்.

கொரோனாவின் பெயரால் என்ன செய்யப்பட்டாலும் அது அமைப்புசாரா தொழில்துறை மீதான மூன்றாவது  தாக்குதல் ஆகும். எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி ஊரடங்கை அறிவித்தபோது நீங்கள் அவர்கள் மீதான தாக்குதலை தொடங்கினீர்கள்.

இந்த போராட்டம் 21 நாட்களுக்கு இருக்கும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனால் 21 நாளில் அமைப்பு சாரா தொழில் துறையின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வந்து திறக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. அப்போது ஏழைகளுக்கு உதவ வேண்டியது அத்தியாவசியமானது என்று பல முறை மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கூறியது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருக்கு நீங்கள் ஒரு சலுகை தொகுப்பை தயாரித்து தர வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இந்த பணம் இன்றி அவர்களால் வாழ முடியாது என கூறினோம். ஆனால் அதையும் அரசு செய்யவில்லை. அதற்கு பதிலாக அரசு 15-20 பணக்காரர்களின் பல இலட்சம் கோடி மதிப்புள்ள வரிகளை தள்ளுபடி செய்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்