Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்!

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்!

2 minutes read
 புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்...

இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.

1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிய கட்டிடப்பணிகள் 6 ஆண்டுகள் நடந்தது. பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வினால் பாராளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய மதிப்பில் ரூ.83 லட்சத்தில் பாராளுமன்றம் கட்டப்பட்டது.

90 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டிடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.

இதன் கட்டுமான பணிக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. இதில் ரூ.861.90 கோடிக்கு கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் தட்டிச்சென்றது.

இதைத்தொடர்ந்து புதிய பாராளுமன்றத்துக்கான கட்டுமான பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாராளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் (சுமார் 2 ஆண்டுகள்) மாதத்துக்குள் முடிக்கப்படும் என தெரிகிறது. அதுவரை தற்போது இருக்கும் கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் வழக்கம் போல நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று கூறியது. மேலும் கட்டுமான பணிகளின் போது ஒலி, காற்று மாசுபாட்டை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மக்களவை செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நலத்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தினார். வீட்டுவசதி துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பாராளுமன்ற கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து சபாநாயகருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

கட்டுமான பணிகள் நடைபெறும் போது பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது எப்படி என்று ஆய்வு செய்த சபாநாயகர், கட்டிடம் அமைய உள்ள இடத்தில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் பணிகளின் நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

முக்கோண வடிவில் அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வகையில் பிரமாண்ட அரசியல்சாசன அரங்கு, ஒரு நூலகம், பல்துறை கமிட்டி அறைகள், சாப்பாட்டு அரங்குகள், பார்க்கிங் வசதிகள், அனைத்து எம்.பி.க்களுக்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவை இடம்பெறுகிறது.

இதைப்போல 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரமாண்ட மக்களவை அறை, 384 உறுப்பினர்கள் அமரத்தக்க வகையில் மாநிலங்களவை அறையும் அமைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். ஆனால் எதிர்கால தொகுதி விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த பிரமாண்ட அறைகள் அமைக்கப்படுவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More