
சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) இணைந்தார்.
செய்தியாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய ஆட்சிப் பணியாற்றிய சந்தோஷ் பாபு, கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்றார்.
சந்தோஷ் பாபு நிர்வாக இயக்குநராக இருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனுக்கான ஒப்பந்த புள்ளிக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட மாற்றுக்கருத்தின் காரணமாக அவர் இன்னும் சுமார் எட்டாண்டுகள் பணி உள்ள நிலையிலும், விருப்ப ஓய்வு பெற்றார் என்று ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில், அவர் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று இணைந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கமல் ஹாசன், “நல்லதையும், நேர்மையையும் நோக்கிய எங்களது பயணத்தில் சந்தோஷ் சரியான நேரத்தில் இணைந்துள்ளார். நல்லவர்களின் கூட்டணி என்று நான் கூறியதை சரியாக புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள். அதற்கான முன்னுதாரணமாக இன்னும் நல்லவர்களும் வல்லவர்களும் கட்சியில் இணைய இருக்கிறார்கள்” என்று கூறினார்.