புதுச்சேரியில் பா.ஜ.க அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் காலனியில் அரசு பள்ளி கட்டுமான பணியை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களில் அவர் தெரிவித்துள்ளதாவது, “புதுச்சேரியில் பா.ஜ.க அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது.
கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் செய்ததை போல தமிழகத்திலும் அநாகரிக அரசியலை செய்ய துடித்து கொண்டிருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.