சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட நடுக்குப்பம், செல்லம்மாள் தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இலவச தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அவர், அதனை தொடர்ந்து வீடு வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது பாதிப்பு அதிகமாக இருப்பதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி, அவர்களிடம் நலம் விசாரித்தார்.
அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார். தொடர்ந்து ராயப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அடிப்படை வசதிகள் உட்பட பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தேவையான அரசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை நேரடியாக சென்று வழங்கினார்.