செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்!

தமிழக அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்!

2 minutes read

சென்னை: மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மேகதாது அணை பிரச்னை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 13 கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு பல்வேறு கட்சி பிரதிநிதிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஜெயக்குமார் (அதிமுக முன்னாள் அமைச்சர்): தமிழக அரசின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில், மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினோம். காவிரி நதிநீரை பொறுத்தவரையில் தற்போதைய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் அதிமுக அரசியல் செய்யாது. தமிழக மக்கள் நலன் மற்றும் டெல்டா மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். கர்நாடக அரசு அணைக்கட்டுவது சட்ட விரோதமான செயல் ஆகும்.

கே.எஸ்.அழகிரி(தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்): கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தினை மீறி கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழக அரசு சட்டத்தின் மூலமே தீர்வு காணும். காவிரி தமிழகத்திலும் ஓடுகிறது. எனவே, காவிரி யாருக்கும் சொந்தம் கிடையாது. நடுநிலையானது. எனவே, கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் அரசின் முடிவுகளுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளார்கள். கர்நாடக அரசு கூறும் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. மாநிலத்திற்கு இடையே தண்ணீர் பிரச்னை வரும் போது நமக்கு நம் மாநிலம் தான் முக்கியம்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): கர்நாடக அரசு பெங்களூருவின் குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி மேகதாது அணையை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்து பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்த உள்ளோம்.

முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 3 தீர்மானங்களையும் வரவேற்கிறோம். மேகதாது அணையை கட்டினால் தமிழகத்தில் ஏறத்தாள 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பாசன வசதி என்பது இல்லாமல் போய்விடும். கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு சாதகமாக செயல்படக்கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.

திருமாவளவன்(விசிக தலைவர்): அரசின் முயற்சிகளுக்கு அனைத்துக்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளோம். அனைத்துக்கட்சி குழு பிரதமரை சந்திக்க உள்ளது. அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விசிக ஆதரவாக இருக்கும். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாயமாக இதுகுறித்து குரல் எழுப்புவோம்.

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ(பாஜக): மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், முடிவுகளுக்கும் பாஜ சார்பில் முழு ஒத்துழைப்பை கொடுப்போம். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார். தமிழக மக்களின் நலன் மட்டுமே தமிழக பாஜகவின் நிலைப்பாடு.

ஜி.கே.மணி(பாமக தலைவர்): மேகதாது திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. இந்த திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இதுதான் எங்களின் முதன்மையான கோரிக்கை. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தமிழக அரசின் முடிவுகளுக்கு பாமக முழு ஒத்துழைப்பை வழங்கும்.

ஜவாஹிருல்லா(மமக தலைவர்): மேகதாது அணை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நலனையும் பறிக்கும் செயல். இன்று மூன்று முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் முயற்சியை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி நீர் பிரச்னை வரும் போது கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை முதல்வரிடம் எடுத்துக்கூறியுள்ளோம். இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், பிரதமரிடம் இதுகுறித்து பேசி வலியுறுத்தவும் வேண்டும். மேகதாது அணையை கண்டிப்பாக கட்டக்கூடாது.

ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): எடியூரப்பாவின் பதவி ஆடிக்கொண்டிருப்பதால் அவர் மேகதாது அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளார். கண்டிப்பாக தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்காது. இதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.