Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘பல்டி’ அடித்தாரா கோட்டா?

‘பல்டி’ அடித்தாரா கோட்டா?

4 minutes read

Image may contain: 1 person, smiling, playing a musical instrument

தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ‘பல்டி’ அடித்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களின் வாக்குகளையும் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனை, கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டாபய ராஜபக்ச சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் தமிழர்களின் ஆதரவு இன்றியே வெல்லுவேன் என்று கோட்டாபய ராஜபக்ச நம்புகின்றார் என்றும், அவர் சர்வதேச மதிப்புக்காக 3 இலட்சம் தமிழ் வாக்குகளையும் குறிவைக்கின்றார் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ச ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளைப் பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம். அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் தனக்குத் தேவை என்று கோட்டாபாய ராஜபக்ச கூறுகின்றார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான த.சித்தார்த்தனுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு போலியான தகவல்கள் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

‘தமிழ் மக்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை’ என்று கோட்டாபய ராஜபக்ச கூறியதாக பரவி
வருகின்ற போலியான செய்திகளுக்குக் கடும் கண்டனத்தை கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவரின் வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்துத் தமிழர்கள், சிங்களவர்களின் வாக்குகளை அவர் எதிர்பார்க்கின்றார். உண்மையான விடயங்களை ஊடகங்களில் வெளியிடாமல் ஊடக தர்மத்துக்கு எதிராக செயற்படும் ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கோட்டாபய தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பலர் கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேசி வருகின்ற நிலையில், இவர் அரசியலில் வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்து விடுவார் என்ற பயத்திலும், தன் மேல் உள்ள தனிப்பட்ட பகையையும் கருத்தில்கொண்டு இவ்வாறு பொய்யான செய்திகளை நாட்டு மக்கள் மனதில் விதைத்திட முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

என் மீதும் நம் நாடு மீதும் அன்பு கொண்டுள்ள மக்களை இவ்வாறான போலியான செய்திகளைப் பரப்புவதன் மூலம் திசை மாற்றிவிட இயலாது என்றும், இவ்வாறான போலியான செய்திக்கு ஊடகங்களைத் துணைபோக வேண்டாம் என்றும் கோட்டாபய கேட்டுக்கொள்வதாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்தார்த்தனின் அறிக்கை

இதேவேளை, இந்தச் சந்திப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராவேன். எமது மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக தென்னிலங்கை தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவது இயல்பான விடயமொன்று. தென்னிலங்கை தலைவர்களுடனான அணுகுமுறைகள் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்க முடியும் என்பது பொதுப்படையான விடயமாகும். அதனடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச என்னைச் சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்தக் கோரிக்கைக்கு அமைவாகவும் அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதால் அவருடைய நிலைப்பாடுகள் பற்றி அறிவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அந்தச் சந்திப்பை பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான ஆமோதிப்பைச் செய்திருந்தேன்.

இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உங்களுக்கு எதிராக மன நிலையுடன் இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைப்பதற்கான சத்தியம் குறைவு என்று நேரடியாகவே கூறினேன்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவரிடத்தில் காணப்படும் திட்டங்கள் தொடர்பில் நான் வினவியிருந்தேன். அச்சமயத்தில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் தயாராக இருப்பதாகக் கூறினார். இருப்பினும் பொலிஸ் அதிகாரத்தை வரையறைக்குட்பட்டதாக வழங்க முடியும் என்றும், காணி அதிகாரத்தை உடனடியாக வழங்குவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன என்றும் கூறினார்.

பெரிய அபிவிருத்தி திட்டங்கள் வருகின்றபோது மாகாண சபையின் கீழ் காணி அதிகாரம் காணப்படுமாயின் அத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க முடியாது போகும் நிலைமை ஏற்படும் என்றும், கடந்த காலத்தில் அவ்வாறான அனுபவங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், தென்னிலங்கை போன்று, வடக்கு, கிழக்கையும் சமச்சீராக கருதி பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை தான் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளிட்ட அரசியல் ரீதியான அனைத்தையும் மஹிந்த ராஜபக்சவே கையாளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தபோது, 12 ஆயிரம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி எமது காலத்திலேயே விடுவித்துள்ளோம். ஆகவே, எஞ்சியவர்களை விடுவிப்பதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.

இதனை விடவும் கடந்த தேர்தலில் எமது தரப்பு 75 ஆயிரம் வாக்குகள் வடக்கில் கிடைத்திருக்கின்றபோதும் இம்முறை அந்த மக்கள் அனைவரும் எதிர்காலம் நோக்கி சிந்தித்து எமக்கு 2 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் கோட்டாபய குறிப்பிட்டார். அவ்வாறு தமிழ் மக்களின் ஆணையும் தனக்கு கிடைக்கின்றபோது சக்தியான ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு உந்துதல் அளிக்கும் என்றும் கூறினார்.

இனப்பிரச்சினை தீர்வு உட்பட அனைத்து விடயங்களிலும் நாம் கூட்டமைப்பாகவே தீர்மானிப்போம். கூட்டமைப்பின் தலைவரே தீர்க்கமான தீர்மானங்களை அறிவிப்பார் என்பதே எமது தரப்பின் நிலைப்பாடு என்ற விடயத்தையும் நான் அவருக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்.

மேலும், கோட்டாபயவுடனான சந்திப்பில் இவ்விடயங்களே பேசப்பட்டுள்ள நிலையில் இவற்றுக்கு அப்பால் வெளியாகும் பல்வேறுவிதமான ஊடகத் தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை” – என்றுள்ளது.

No photo description available.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More