பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி; 16-18 வரை பாடசாலை இல்லை; ஆசிரியர்கள் போராட்டம்

அதிபர், ஆசிரியர்களே!

16,17,18 அதிபர், ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு ஏன்?

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உள்ளது என அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் – கல்வியமைச்சருடன் இணக்கம் காணப்பட்ட – இடைக்கால சம்பள அளவுத் திட்டத்தை அமுல்படுத்தக்கோரி அதற்குரிய சுற்று நிருபத்தை வெளியிடுமாறு அழுத்தம் கொடுப்பதற்காகும்.

லீவு அறிவிக்க வேண்டுமா?

தேவையில்லை. ஏனெனில் அனைத்து அதிபர், ஆசிரியர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்களால் ஏற்கனவே கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடுவது சட்டவிரோதமானதா? வேலை பறிபோகுமா?

பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கம் -தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடுவது சட்டபூர்வமானது. அதற்குள் பணி பகிஸ்கரிப்பும் ஒரு அணுகுமுறையாகும்.
இதனால் – தொழிற்சங்க போராட்டத்துக்காக வேலையை பறிக்க முடியாது.

அப்படியாயின் சட்ட பாதுகாப்பு உண்டா?

ஆம்.
1.சர்வதேச தொழிற்சங்க உரிமைகள் தொடர்பான 87,98 இலக்க சாசனங்களில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது.
2.தொழிற்சங்க உரிமை தொடர்பான இலங்கை சட்ட மூலத்திலும் – 26 வது பிரிவு – தொழிற்சங்கமொன்று – தொழில் ரீதியான உரிமைகளைப் பெறுவதற்கு – தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராகவோ அல்லது அதற்காக பிரச்சாரம் செய்வதற்கு எதிராகவோ எந்தவொரு சிவில் நீதிமன்றங்களிலும் வழக்குத்தொடரமுடியாது எனக் கூறுகிறது.
3. 27 ஆம் பிரிவு குறித்த போராட்டங்களின் நிமித்தம் ஏற்படும் பாதிப்புக்கு எதிராகவும் வழக்கு தொடரமுடியாது என குறிப்பிட்டுள்ளது.
உ-ம் –
1.பணிபகிஸ்கரிப்பின் நிமித்தம் அதிபர் ஒருவர் பாடசாலைக்கு செல்லவில்லையாயின் – அதனால் ஆசிரியர் ஒருவர் கையொப்பமிடமுடியவில்லை எனும்போர்வையிலோ அல்லது – பணியை வேறு நபரிடம் ஒப்படைக்கவில்லை எனும் போர்வையிலோ மாணவர்களை கவனிக்கவில்லை எனும் போர்வையிலோ நடவடிக்கை எடுக்க முடியாது.
2.முற்கூட்டியே பணிபகிஸ்கரிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் – மாணவர்களை பாடசாலைக்கு சமூகமளிக்கவேண்டாம் என மாணவர்களின் பாதுகாப்பு கருதி எவரும் கூறலாம். அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியாது.
3. முற்கூட்டியே உத்தியோகபூர்வமாக பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நிலையில் -பாடசாலை விடயமொன்றுக்கு அவசியம் வருமாறு அதிபரோ அல்லது அதிகாரிகளோ ஆசிரியர், அதிபரை அழைத்தாலும் – அதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் நடவடிக்கை எடுக்கமுடியாது.

எனவே தொழிற்சங்க ரீதியான பணிபகிஸ்கரிப்பு என்பது சட்டபூர்வமானதாகும். இதன் அடிப்படையிலேயே புகையிரத ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், மருத்துவர்களின் பணி பகிஸ்கரிப்புக்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் உரிமைகளை பேணவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அந்தப் பொறுப்பை அரசாங்கங்கள் செயற்படுத்தாமையே போராட்டங்களாக மாற்றமடைகிறது. இதன் அடிப்படையிலேயே 16,17,18 அதிபர், ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு நடைபெறவுள்ளது.

அதிகம் பகிர்ந்து விழிப்பூட்டுவோம்!
போராட்டம் வெற்றியடைய ஒத்துழைப்போம்!

எமது உரிமைக்காக நாம் தான் போராடவேண்டும்!

ஆ.தீபன் திலீசன்,
உபதலைவர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.

ஆசிரியர்