அவர்கள் குறித்து முன்னெடுத்த விசாரணையில், அவ்விருவரும் வேண்டுமென்றே, தண்டிக்கும் நோக்குடன் அவ்வாறு அநநால்வரையும் தோப்புக்கரணம் போட வைக்கவில்லை என்பது தெரியவந்ததால், பொலிஸ் தலைமையகம் மீள அவர்களை பணியில் அமர்த்த முடிவெடுத்ததாக பொலிஸ் ஒழுக்காற்று மற்றும் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு நகர போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் மீள இவ்வாறு பணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மருதானை  பொலிஸ் பிரிவின், டாலி வீதி பகுதியில் கடந்த 12 ஆம் திகதி ஊரடங்கு அமுலில் இருந்த போது, ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி அந்த வீதியால் நடந்து சென்ற நால்வரை, இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிடித்து, தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்தனர்.

தனது கைகளால் இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு குனிந்து எழும் வகையில் இவ்வாறு  அந்த நால்வரும் தண்டிக்கப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகின. இதனையடுத்து பொலிஸ் தலைமையகம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்தது.

 இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கொழும்பு நகர போக்குவரத்து பிரிவின் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிள் தர அதிகாரிகள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்தே,  கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ்  அத்தியட்சகர்  புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய, அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால்  குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும்  பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைய அவர்கள் இவ்வாறு பனிஇடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

 பொலிஸ் கட்டளைகளுக்கு அடி பணியாமை,  பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட அவர்கள் இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே, அவர்களை சட்டத்துக்கு புறம்பாக தண்டிக்கும் நோக்கில் ஈடுபடவில்லையென தெரியவந்ததால், இவ்வாறு மீள கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.