மட்டக்களப்பு- கட்டுமுறிவு குளத்தில் வசிக்கும் ரவீந்திரன் கிருஸ்டிக்கா (வயது 4) என்ற குழந்தை, விஷப்பாம்பு கடித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகள் அற்ற ஒரு குடிசை வீட்டில் குறித்த குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை வேளையில் விஷப்பாம்பு குழந்தையை கடித்துள்ளதை பெற்றோர் அறிந்த நிலையில், 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கதிரவெளி வைத்தியசாலைக்கு தன்னுடைய மகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர் தெரிவித்தனர்.
கட்டுமுறிவு குளம் கிராமமானது மிகவும் பின்தங்கிய மாவட்டத்தின் எல்லைப் புறத்தில் உள்ளது. அங்குள்ள மருத்துவ சிகிச்சை நிலையம், எந்தவிதமான மருத்துவ உதவியும் கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளது.
விஷப்பாம்பு, காட்டு யானை தாக்குதல், காட்டு மிருகங்கள் தாக்குதல் என்பன இடம்பெற்றாலும் சிகிச்சை பெறுவதற்கு பல சிரமத்தின் மத்தியில் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கதிரவெளி வைத்தியசாலைக்கு வர வேண்டிய நிலைமை உள்ளது.
அதுபோன்று பல சிரமத்தின் மத்தியில் கைக்குழந்தை, கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சைக்காக கதிரவெளி வைத்தியசாலை மற்றும் வாகரை வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இதுபோன்றதொரு உயிரிழப்பு மேலும் குறித்த பகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்கு மருத்துவ அதிகாரிகள் கவனம் செலுத்தி நிரந்தர வைத்தியசாலை அமைத்துத்தர வேண்டும் என குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கதிரவெளி இருந்து கட்டுமுறிவு செல்லும் பிரதான பாதையானது நீர் நிரம்பி காணப்படுவதனால், பல கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.