Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் எழுதிய கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் எழுதிய கடிதம்

3 minutes read

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,

இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.

தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது.

2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம்.

தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ எனும் துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை’ எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது. ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும் அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு.

ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம்.

தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.

கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தயாகம்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படங்கள் : இச்செய்தி தொடர்பில் தமிழ்நாடு தொலைக்காட்சியில் வந்த குறிப்பு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More