Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி

5 minutes read

• குற்றங்களை புரியாது விட்டால் தீர்மானங்களை பார்த்து அஞ்சுவது ஏன் என்றும் கேள்வி

• காலக்கிரமத்தில் இதுபோன்று பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் ராஜபக்ஷவினரின் அரசுக்கு எச்சரிக்கை 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் இதுகால வரையிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட விளைவுகளில்  ஒன்றாகவே அமெரிக்க காங்கிரஸால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர்.

2009 மே 18, அன்று இலங்கையில் போர் முடிவடைந்து 12 ஆண்டுகளை அங்கீகரித்து, இழந்த உயிர்களை கௌரவித்தல் மற்றும் இலங்கை மக்கள் அனைவருக்கும் செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, இலங்கையில் நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதிப்படுத்துவதற்கான நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு மற்றும் மறுசீரமைப்புக்கான ஆதரவை வெளிப்படுத்துதல் எனும் தலைப்பில் , ஜனநாயக கட்சின் வட கரோலினா மாநில காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரொஸினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரேரணைக்கு, பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களான, பில் ஜோன்சன், டானி டேவிஸ், பிரட் ஷேர்மன், கதி மன்னிங், ஆகியோரும் இணை அனுசரணை வழங்கியிருக்கின்றனர். இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம் அதன் முன்நகர்த்தல் செயற்பாடுகளை உடனடியாக இடை நிறுத்துமாறும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. 

இந்நிலைமை தொடர்பில் தனித்தனியாக சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனிடத்தில் வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் வருமாறு,

சம்பந்தன் கூறுகையில், இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக போரின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட இனநல்லிக்கணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் என்று பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. 

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்கான விருப்பத்தினை வெளியிட்டிருந்தார். ஆகவே ராஜபக்ஷ சகோதரர்கள் இருவருமே உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். 

ஆனால் அவர்கள் அதனை நடைமுறையில் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருக்கவில்லை. அதேநேரம், ஜனநாயகத்திற்கு முரணான கருமங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இதனால் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமை நீடிக்கின்றது. 

இவ்வாறான நிலையில் தான்  அமெரிக்கா காங்கிஸால்  இலங்கை பற்றிய முன் கூட்டத் தீர்மானம் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தகட்டமாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிருந்து விலகி நிற்க முடியாத நிலைமைகள் தீவிரமடையும். 

அரசாங்கம் இதுகாலவரையிலும் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிட்டு உடனடியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல் இதுபோன்ற பல விடயங்களுக்கு சர்வதேச ரீதியாக முகங்கொடுக்க நேரிடும். அடுத்துவரும்காலங்களில் இவ்விதமான பல காரியங்கள் நிகழலாம் என்றார். 

விக்னேஸ்வரன் கூறுகையில், உறுப்பினர் ரொஸ் தம் சார்பிலும் மற்றைய உறுப்பினர் நால்வர் சார்பிலும் இந்தக் முன்கூட்டத் தீர்மானம் முன்வைத்து அது வெளிநாட்டலுவல் குழுவிற்குத் தற்போது பாரப்படுத்தப்பட்டுள்ளது. 

அண்மையில் நாம் நடத்திய “பறிபோகும் எமது வடகிழக்குக் காணிகள்” பற்றிய மெய்நிகர்கூட்டம் கூட தீர்மானத்தினை முன்னிலைப்படுத்த உதவியிருக்கும் என்று நம்புகின்றேன். 

ஏனென்றால் ரொஸ் குறித்த மெய்நிகர் கூட்டத்தை மிக உன்னிப்பாகச் செவிமடுத்தார் என்று அறிகின்றேன். இந்தத் தீர்மான வரைவு நடந்ததையே வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அரசாங்கம் செய்வதாக வாக்களித்துப் பின்னர் நடைமுறைப்படுத்தாதவற்றையே குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் சபையின் 2017மே, ஆண்டின் 30/1 தீர்மானம் முன்னர் ஸ்ரீலங்கா செய்வதாக வாக்களித்தவற்றையே மேலும் உறுதிப்படுத்தியது. அவையாவன – 

1. பொதுநலவாய நாடுகளின் மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் மேலும் விசாரணையாளர்களைக் கொண்டு பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஒரு பொறிமுறையாக விசேட நீதிமன்றமொன்றை உருவாக்குவது.

2. உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை உருவாக்குவது. 

3. காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஒரு அலுவலகத்தை உருவாக்கல்.

4. மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்க பாதிக்கப்பட்டோரின் நிவாரணம் பற்றிய அலுவலகத்தை உருவாக்கலும் நிறுவன ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதும். 

5. முரண்பட்டிருக்கும் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்தல்

ஆகவே இவை பற்றி அப்போதிருந்த அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பின்னர் புதிய அரசாங்கம் வந்த பின் குறித்த 30/1 தீர்மானம் இலங்கையால் கைவாங்கப்பட்டது.

இதுபற்றிக் கூறி புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் குறித்த தீர்மானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

1. போர்க்குற்றம் இழைத்தவர்கள் அரசாங்கத்தால் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை.

2. நீதிமன்றங்களால் போர்க்குற்றம் புரிந்தவர் என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு அளித்தமை.

3. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதியின் கைகளுக்கு அதிகாரம் முற்று முழுதாகச் சென்றடைய வழிவகுத்துள்ளமை.

4. போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரணை செய்யாது தடுத்து வைத்துள்ளமை.

5. பெரும்பான்மையினரின் அதிகாரங்களைப் பெருக்கி வைத்து தனித்துவமாக அவர்கள் சார்பில் அரசாங்கம் நடத்தி வருவது.

6. பொதுமக்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் சதா கண்காணித்து வர நடவடிக்கைகள் எடுத்துள்ளமை.

7. படையினரைக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரானவர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும். 

இலங்கை அரசாங்கம் பல விடயங்களைச் செய்வதாகக் கூறி செய்யாது விட்டமையால்த் தான் இந்தக் கூட்டத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் இதுகாறும் கொடுத்து வந்துள்ள உறுதி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியே இந்தக் கூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதால் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படலாம், சமாதானம் நிலைநாட்டப்படலாம் என்றும் கருதப்பட்டுள்ளது.

தீர்மானத்தில், போர் முடிந்து 12 வருடங்கள் ஆகிவிட்டுள்ளமை பற்றியும், போரில் இறந்தவர்களை நினைவுறுத்தி வாழும் மற்றவர்களின் மீள் நிர்மாண முயற்சிகளுக்கு உதவ முன்வந்துள்ளமை பற்றியும், 2021ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் 46/1 ஆம் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தியே மேற்படி கூட்டத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.  இதை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

விசாரணைகள் நடைபெறாத வரையில் தம்மைப் பற்றி தமக்கு எதிரானவர்கள் அநியாயமாகப் பழி சுமத்துகின்றார்கள் என்று தொடர்ந்து கூறி வரலாம். ஆனால் விசாரணைகள் நடந்தால் உண்மை புலப்பட்டு விடும். அதனால்த்தான் சாட்சிகள் இன்றி போர் நடத்திய அரசாங்கம் விசாரணைகளுக்கும் சர்வதேச மக்களின் கண்டனங்களுக்கும் அஞ்சுகின்றது. 

உண்மையில் இலங்கை போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மனிதாபிமான முறையில் தனது மக்களை, முக்கியமாகத் தமிழ் மக்களை, நடத்தி வந்திருந்தால் அது ஏன் இவ்வாறான கூட்டத் தீர்மானங்களுக்குப் பயப்பட வேண்டும்? எதற்காக சீனா போன்ற நாடுகளிடம் மன்றாடித் தஞ்சம் புக வேண்டும். குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கின்றது. 

நான் குறித்த கூட்டத் தீர்மானத்தை வரவேற்கின்றேன். காலக்கிரமத்தில் இலங்கை சர்வதேச குற்றவியல் மன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் வாக்கெடுப்பு விரைவில் ஐக்கிய நாடுகளால் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்கு முன்னோடியாகவே மேற்படி கூட்டத் தீர்மானத்தைப் பார்க்கின்றேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More