March 26, 2023 11:00 am

திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, நாட்டில் தீடீரென கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்த வேளையில், மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் இணைந்து நாட்டை முடக்கி கொரனாவை கட்டுப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அதன்போது அந்த விடயத்தை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டுவந்த அரசாங்கம், தற்போது வேண்டா வெறுப்பாக எத்துயர் ஏற்பட்டாலும் அதனை மக்களே எதிர்கொள்ளட்டும் என்ற விரோத சிந்தனையுடன் திடீரென நாட்டை முடக்குவதாக தெரிவித்துள்ளது என செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பினால், பொது மக்கள் பலரும் நகர்ப்பகுதியில் அதிகளவில் ஒன்று கூடியிருந்தனர். இது கொரோனா தொற்றை நிறுத்துவதற்கு பதிலாக அதிகரிப்புக்கே வழிவகுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

அதாவது வங்கிகள், நகை அடகு வைக்கும் இடங்களில் மக்கள் அதிகமாக காணப்பட்டனர். வர்த்தக நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இது பாரதூரமான விளைவை ஏற்படுத்துமென செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் ஒரு நாள் தவணை வழங்கி நாட்டை முடக்கியிருக்கலாம். திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்