Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நியூஸிலாந்தில் இலங்கைப் பிரஜையின் பயங்கரவாதத் தாக்குதல்!

நியூஸிலாந்தில் இலங்கைப் பிரஜையின் பயங்கரவாதத் தாக்குதல்!

2 minutes read

இலங்கைப் பிரஜை ஒருவர் நியூஸிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அதிர்ச்சியடைவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”செப்டெம்பர் 3ஆம் திகதி நியூஸிலாந்தின் ஒக்லாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பேரங்காடியின் உள்ளே சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் போக்குடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பொது மக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அறிந்ததில் மிகுந்த அதிர்ச்சியும் கடுமையான மனவேதனையும் அடைகிறோம்.

வெறுக்கத்தக்க மிலேச்சத்தனமான இப்பயங்கரவாதச் செயலை குறிப்பாக காத்தான்குடி மக்கள் சார்பாகவும், இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பிலும் எமது சம்மேளனமும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் காத்தான்குடி கிளையும் இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறிய நேர்மையானதும், நடுநிலையானதுமான வார்த்தைகள் அர்த்தமிக்கவையும் மெச்சத்தக்கவையுமாகும்.

தாக்குதலைச் செய்தவர் ஒரு தனி நபர், அவர் செயலுக்கு அவர்மட்டுமே பொறுப்பாவார். தாக்குதல் சம்பவம் ஒரு மத நம்பிக்கையையோ, குறிப்பிட்ட இனக்குழுவையோ, கலாசாரத்தையோ சாராது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எமது கருத்து நிலையும் அதுசார்ந்ததாகவே இருக்கிறது. நிச்சயமாக இத்தாக்குதலானது மிகப்பிழையானது, அருவருப்பான செயலும்கூட. தீவிரவாதமும் பயங்கரவாதமும் அதன் எந்த வடிவிலும் ஏற்கத்தக்கதல்ல. எந்தவொரு இனமோ, மதமோ, கலாசாரமோ அதற்கு சார்பாகவோ பொறுப்பாகவோ இருக்கவும் முடியாது. இருக்கவும் கூடாது.

தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அவர்களது குடும்பங்களின் வலியை நாமும் உணர்கிறோம். மனிதம் சார்ந்த உறவு நிலையில் இன,மத, தேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கான எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.

ஊடகங்கள் வாயிலாகவும், உள்ளூர் மட்ட அறிதல்கள் அடிப்படையிலும் நாம் அறிவது என்னவென்றால் இவ்வீனசெயலைப் புரிந்த பயங்கரவாதியும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக காத்தான்குடியில் இருக்கவில்லை. தொழில் , கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறி நீண்ட காலமாக வெளியில்தான் வாழ்ந்தனர்.

குறிப்பாக ஸ்தலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட குறிப்பிட்ட பயங்கரவாதி சிறிய வயதிலேயே ஊரைவிட்டு வெளியேறியவர், உள்ளூர் சமூக தொடர்பறுந்தவராகவே அவர் இருந்தார் என்றும் அறிகிறோம்.

இந்தப் பின்னணியை மையப்படுத்தி இந்நாட்டின் ஒரு இனத்தைக் கொச்சை படுத்துவதையும் ஓர் ஊரின் கண்ணியத்தை பங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் பொறுப்பு வாய்ந்த சிவில், மார்க்க அமைப்புக்கள் என்ற வகையில் நாம் கவலையுடன் – விசனத்துடன் நோக்குகின்றோம்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More