March 26, 2023 9:37 am

பணம் அச்சடிப்புக்கும் விலைகள் அதிகரிப்புக்கும் சம்பந்தமில்லை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் தற்போது சில அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை அதிகரித்துள்ளமைக்கு பணம் அச்சடித்தமை காரணமல்ல என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், ரூபாவின் பெறுமதி மற்றும் வெளிநாடுகளில் அந்த பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களே உள்நாட்டில் அதன் விலையதிகரிப்புக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் எந்தளவு பணம் அச்சிடப்பட்டுள்ளது என்பதை மத்திய வங்கியின் இணையத்தளத்திற்கு சென்று எவரும் பார்வையிடலாம். எமக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியமாகவுள்ளதுடன் பணவீக்கத்தை அதிகரிப்பது எமது தேவையல்ல. அதுதொடர்பில் நாம் மிகுந்த அவதானத்தை செலுத்தியுள்ளதுடன் முறையான முகாமைத்துவத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

நாட்டில் எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பதற்கு பணம் அச்சடித்தமை காரணமல்ல. விநியோகத்திற்கான அழுத்தங்கள் நாணயத்தின் பெறுமதி மற்றும் வெளிநாடுகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணமாகும்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு மத்திய வங்கியினால் சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே வேளை, இந்த வருடத்தில் இலங்கையானது நூற்றுக்கு ஐந்து வீதமான பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்