March 26, 2023 11:12 pm

பிக்குமார் வெறியாட்டம்! – பற்றி எரிந்தது “13”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட பிக்குமாரை பொலிஸார் தடுக்க முற்பட்ட போதே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த பிக்குமார் இன்று கோட்டே, பரகும்பா பிரிவெனாவுக்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்தனர்.

பேரணியைப் பொலிஸார் தடுத்த போதும், பிக்குமார் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தியத்த பூங்காவைக் கடந்து பொல்துவ சந்தியை பிக்குமார் அடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் சிலர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

அதன்பின்னர் பிக்குமார் அரசுக்கு ஒரு வாரம் காலக்கெடு வழங்கிப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டனர்.

ஒரு வாரத்துக்குள் தமக்கு இதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அவ்வாறு தமக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு கிடைக்காவிடின் ஆயிரக்கணக்கான பிக்குமாரை ஒன்றிணைத்து மிகிந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி மாபெரும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிக்குமார் குறிப்பிட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்