Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முருகன், அண்ணாமலையிடம் மனோ விடுத்த வேண்டுகோள் என்ன?

முருகன், அண்ணாமலையிடம் மனோ விடுத்த வேண்டுகோள் என்ன?

3 minutes read

“இந்தியாவை எந்தக் கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி உங்கள் பாரதீய ஜனதா கட்சி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக கிளை தலைவர் கே. அண்ணாமலை ஆகிய நீங்கள் இருவரும் உங்கள் கட்சியின் இரண்டு பிரதான ஆளுமைகள். உங்கள் கட்சி, அரசாங்கம் சார்பில் நீங்கள் இருவரும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும். தொப்புள் கொடி உறவுகளான எம்மீது, இந்தியாவின் குறிப்பாக இந்திய மத்திய அரசாட்சி கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் அக்கறை இன்னமும் கணிசமாக அதிகரிக்க வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் எதிர்பார்க்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கை வந்த அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கும், இலங்கை அரசியல் சமூக தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை இந்தியத் தூதரகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. அமைச்சர் முருகன், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, இந்தியத் தூதுவர் கோபால் பாகலே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ரிஷாத் பதியுதீன் எம்.பி., இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், கோபியோ இலங்கை கிளை தலைவர் குமார் நடேசன், வர்த்தகர் கோபால்சாமி ஆகியோரும் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:-

“தென் தமிழக மாவட்டங்களான திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து சரியாக 1823 ஆண்டு முதல் இலங்கைக்கு ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டு, இன்றைய 2023ல் 200 ஆண்டுகளை இலங்கையில் நிறைவு செய்யும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் உங்கள் அரசும், நாடும் மிக அதிக அக்கறையை கொள்ள வேண்டும் என நான் கோருகின்றேன்.

1964 ஆம் ஆண்டின் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் எம்மை இந்நாட்டில் பலவீனப்படுத்தி விட்டது. இந்த ஒப்பந்தம் நடைபெற்று, நமது மக்கள் நாடு கடத்தப்பட்டு இருக்காவிட்டால், இன்று இலங்கை நாடாளுன்றத்தில் சுமார் 25 மலையகத் தமிழ் எம்.பிக்கள் இருந்திருப்போம். வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் சேர்த்து சுமார் 50 தமிழ் எம்.பிக்கள் அரசியல் பலத்துடன் இலங்கையில் இருந்திருக்க வேண்டிய நிலைமையை ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் இல்லாமல் செய்து விட்டது.

அந்தச் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் எஞ்சியவர்களுக்கு இலங்கை முழு குடியுரிமை வழங்க வேண்டும். இன்று சட்டப்படி குடியுரிமை இருக்கின்றது. ஆனால், காணி, கல்வி, வீட்டு, சுகாதார உரிமைகள் இந்நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமானமாக எமது மக்களுக்கு இல்லை. ஆகவே, முழு குடியுரிமை இல்லை. இதற்காகவே நாம் ஜனநாயக ரீதியாக இலங்கைக்குக் உள்ளே போராடுகின்றோம். இதை இலங்கை அரசுக்கு ஞாபகப்படுத்தி பெற்றுத் தர வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கின்றது.

எங்கள் மக்கள் எழுச்சி அடைய முதல் தேவை, கல்வி எழுச்சியே. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை இடைநிலை, ஜி.சீ.ஈ. சா/த. உ/த, வகுப்புகளில் எமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் போதிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதற்காக உங்கள் நாட்டு ஆசிரியர்கள் இங்கே வந்து எமது பாடசாலைகளில் கற்பிப்பதை இந்நாட்டு ஆசிரிய தொழில் சட்டங்கள் ஏற்காது. நமது ஆசிரிய பணி விண்ணப்பதாரிகளை நாம் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம்.

ஆகவே, ஒரே வழி, எமது மக்களுக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டத்தின் அடிப்படையில், இங்கே ஆசிரிய பயிற்சிகளை நடத்த கலாசாலை அமைத்து, அதற்கு தமிழகத்தில் இருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் பாட ஆசிரிய பயிற்சிகளை வழங்க பயிற்சியாளர்களை அனுப்புவதாகும்.

இந்தத் திட்டத்தை உங்கள் அரசு உடன் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கான உள்நாட்டு அனுமதிகளை, கட்டமைப்புகளை இலங்கை ஜனாதிபதியுடன் பேசி நாம் செய்து தருவோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More