Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பைப் பொதுத்தேர்தல் மூலமே ஏற்படுத்த முடியும்! – ரணில் சுட்டிக்காட்டு

ஆட்சிக் கவிழ்ப்பைப் பொதுத்தேர்தல் மூலமே ஏற்படுத்த முடியும்! – ரணில் சுட்டிக்காட்டு

6 minutes read

மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசை மாற்ற முடியும் என்றும், வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சியின் ஊடாகவும் நாடுகள் அராஜக நிலைக்கு மாறும் என்றும், எனவே ஒரு நாட்டின் அரசமைப்பைப் போன்று, பொருளாதாரத்தையும் ஒருசேர பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திருகோணமலை விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமானப்படைக்குத் தெரிவான கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

திருகோணமலை விமானப்படைத் தளத்தை வந்தடைந்த முப்படைத் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

37 அதிகாரிகளும் மூன்று பெண் அதிகாரிகளும் நேற்று பயிற்சி பெற்று வெளியேறியதுடன், அதிகாரிகளாகும் விமானப்படை வீரர்களுக்கு ஜனாதிபதியால் ‘வாள்’ வழங்கப்பட்டது.

மேலும், பறக்கும் படைப் பயிற்சி பெற்ற 13 உத்தியோகத்தர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், விசேட திறமைகளை வெளிப்படுத்திய 7 பேருக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதிகாரிகளாகும் வீரர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு புகைப்படத்திலும் ஜனாதிபதி இணைந்துகொண்டார்.

விமானப்படை இசைக்குழுவினரால் விசேட நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன் பரிசூட் கண்காட்சியுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:-

“பாடசாலைக் கல்விக்குப் பிறகு விமானப்படையில் இணைந்து, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று அதிகாரிகளாகும் உங்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

கடினமான பயிற்சிக்குப் பிறகு நீங்கள் இன்று அதிகாரிகளாவது, உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்று எனக்குத் தெரியும். ஒருவேளை நீங்கள், உங்கள் ஊரில் விமானப்படை அதிகாரியான முதல் நபராக இருக்கலாம்.

இன்று உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. எனவே, உங்களையும், உங்களின் தொழில் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்தொழிலுக்கு அவப்பெயர் மற்றும் அதனைக் களங்கப்படுத்தும் வகையில் எதையும் செய்யாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இலங்கை விமானப்படையின் உறுப்பினர் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு பெருமையுடன் செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று நீங்கள் அதிகாரிகளாகும்போது, அரசமைப்பை நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்தீர்கள். விமானப் படையின் பதவிப் பிரமாணமும் செய்து கொண்டீர்கள். இந்த இரண்டு பிரமாணங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது உங்களின் முதன்மையான கடமை மற்றும் பொறுப்புமாகும்.

அரசமைப்பைப் பாதுகாப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பாகும். ஏனெனில் நாடு இல்லாமல் அரசமைப்பு இல்லை.

ஒரு நாடு இல்லாமல், அரசமைப்பு வெறும் காகிதத் துண்டாகவே இருக்கும். ஒரு நாடு இருப்பதாலேயே அரசமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நீங்கள் அளித்த சத்தியப் பிரமாணத்தின்படி, இந்நாட்டு அரசமைப்புக்கும், சட்டத்துக்கு உட்பட்டு செயற்படவும், குடியரசுக்கு விசுவாசமாகச் செயற்படவும் உறுதியளித்துள்ளீர்கள்.

நமது நாட்டின் அரசமைப்பின் முதல் சரத்து ‘இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அரசமைப்பு இருப்பது குடியரசுக்காகத்தான்.

நாட்டின் ஒற்றையாட்சி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அத்தியாயம், மக்கள் இறையாண்மையை செயல்படுத்தும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் நமது தேசிய கீதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது.

மற்ற அனைத்து அத்தியாயங்களும் இவற்றைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவே உள்ளன. அப்படியானால், நாம் அதன்படி செயற்பட வேண்டும்.

முதலில் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாடாக இருக்க வேண்டும்.

இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாட்டை அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்க இடமளிக்கக்கூடாது. அது நமது முக்கிய கடமை. அங்கு நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, இந்த நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு 1980 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அந்தச் சந்தர்ப்பத்தில் முப்படையினரும் பொலிஸாரும் உயிர்த் தியாகம் செய்து அதனைப் பாதுகாத்தனர்.

ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாட்டு மக்களின் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

நாடு என்ற வகையில் நாம் ஒரு தனியாக எழுந்து நிற்க வேண்டுமாயின், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்று, அனைத்து மதத்தினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாம் அனைவரும் நமது கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

அதேபோன்று, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை என்ற நிறுவனங்களால் இலங்கையின் சட்டபூர்வ தன்மை நிறுவப்பட்டுள்ளது. சட்டத்துறை இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதித்துறை செயற்படுகின்றது.

இந்த அனைத்து நிறுவனங்களாலும் இலங்கையின் அரசமைப்பைப் பாதுகாப்பது தொடர்பான விடயங்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.

ஒரு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றது அல்லது மாற்றப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. வீதிகள் என்பது நாடாளுமன்றத்துக்கான மாற்று வழியல்ல.

கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றம் இல்லாத நாடுகள் அராஜக நாடுகளாக மாறலாம். ஏனெனில் நாடாளுமன்றம் இல்லையென்றால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போய்விடும்.

அதேபோன்று, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாடுகளும் அராஜகமாகின்றன. எனவே, ஒரு நாட்டின் அரசமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வருவதற்காக, வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல அமைப்புகளுடன் கலந்துரையாடினோம். நாடும் நீங்களும் விரைவில் அதன் பிரதிபலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை இழந்தால் நாம் நாட்டை இழப்போம்.

நாட்டின் அரசமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அடிப்படை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். இது உங்களின் பொறுப்பு ஆகும். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டால், உங்களுக்கு ஒரு நாடு இருக்கும்.

மேலும், அரசமைப்பு வழங்கிய ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பும், நாடும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்கின்றன. அதனைப் பிரிக்க முடியாது. இன்று இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்” – என்றார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More